Sunday, March 20, 2011

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகல்: ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு; வைகோ அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டது. தொகுதிகள் முடிவு செய்யப்படாத நிலையில் 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்தன. அந்த கட்சிகள் தனியாக கூடி ஆலோசனை நடத்தின. இதைத்தொடர்ந்து 3-வது அணி உருவாகுமா? என்ற பரபரப்பு நிலவியது. இதற்கிடையே கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா அழைத்து நேரடியாக பேச்சு நடத்தினார்.இதில் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்டுகள், பார்வர்டு பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் ம.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. ம.தி.மு.க. கடந்த தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஒதுக்கியது போல் இந்த முறையும் தங்களுக்கு 35 இடங்கள் வேண்டும் என்று ம.தி.மு.க. கூறியது.

ஆனால் அ.தி.மு.க. தரப்பில் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதை ஏற்க ம.தி.மு.க. மறுத்து விட்டது. கடைசியாக தங்களுக்கு 21 இடங்கள் ஒதுக்கினால்தான் உடன்பாட்டில் கையெழுத்திடுவோம் என்று ம.தி.மு.க. உறுதியாக தெரிவித்து விட்டது. இதைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் பல கட்டங்களாக பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இரு தரப்பும் இறங்கி வராததால் இழுபறி நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க., ம.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ம.தி.மு.க. அரசியல் உயர்நிலைக் கூட்டத்தை வைகோ கூட்டினார். நேற்று காலையில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் வந்து வைகோவுடன் பேச்சு நடத்தினார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்பு வைகோ நிருபர்களிடம் கூறுகையில், இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. கூட்டம் முடிந்த பிறகு எங்கள் நிலை பற்றி தெரிவிக்கிறேன் என்றார். இதனால் ம.தி.மு.க. முடிவு என்ன என்ற “சஸ்பென்ஸ்” நீடித்தது. அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டினார்.

மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதில் நிர்வாகிகள் காரசாரமாக பேசினார்கள். முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவது என்றும், தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: