Monday, March 7, 2011

திமுக அமைச்சர்கள் விலகல் கடிதம்: ஒருநாள் தள்ளிவைப்பு!

சென்னை: திமுக அமைச்சர்கள் பிரதமரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பது ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியுடன் பிரணாப் பேசியதால் முடிவை தள்ளிவைத்தது திமுக. மேலும் திமுக - காங்., உடனான பேச்சுவார்த்தை குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம்பெற்றிருக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இன்று மாலையில் பிரதமரைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக திமுகவைச் சேர்ந்த 6 அமைச்சர்களும் டெல்லியில் தங்கியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகும் இரு தரப்பிலும் உடன்பாடு எட்ட முடியாத அளவுக்கு பிரச்னை நீடித்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகிக் கொள்வது என்றும், வெளியில் இருந்து பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக அமைச்சர்கள் 6 பேரும் பதவி விலகுவார்கள் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக அமைச்சர்கள் அனைவரும் நாளை காலை டெல்லிக்கு சென்று பிரதமரிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார்கள்’’ என்றார்.

அதன்படி, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன் ஆகிய 4 பேரும் சென்னையில் இருந்து விமானத்தில் இன்று காலையில் டெல்லி சென்றனர்.

அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஏற்கனவே டெல்லியில் இருக்கிறார். காந்தி செல்வன், கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். 6 பேரும் இன்று காலையில் 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால், சந்திப்பு நேரத்தை தள்ளிவைக்கவும் மாலையில் பிரதமரைச் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுக்கவும் திமுக அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

No comments: