Monday, March 7, 2011

முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்! - முதல்வரிடம் பிரணாப் வேண்டுகோள்

டெல்லி: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இன்று முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த வேண்டுகோள் திமுக முடிவில் மாற்றத்தைக் கொண்டுவருமா தெரியவில்லை.

முன்னதாக நேற்றிரவு பாலுவைத் தொடர்பு கொண்ட பிரணாப் இந்தக் கோரிக்கையை வைத்தார். இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய பாலு, என்னை பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார்.

இது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் கருணாநிதி தான் என்பதை பிரணாபிடம் தெரிவித்து வி்ட்டேன். பிரணாப் என்னிடம் பேசிய விவரத்தை முதல்வரிடம் கூறிவிட்டேன். அவர் எடுக்கும் முடிவுப்படியே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதுடன் பிரணாப் முகர்ஜி இன்று காலை ஆலோசனை நடத்தினார். டெல்லியில் முகர்ஜியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. காலை ஜம்முவிலிருந்து டெல்லி திரும்பிய குலாம் நபி ஆசாத் இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை. இந்த ஆலோசனைகளில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரணாப் முகர்ஜி. அப்போது பாலுவிடம் விடுத்த அதே கோரிக்கையை, முதல்வரிடமும் நேரடியாக வைத்தார்.

திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்திக் கோரியதாக கூறப்படுகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏதும் பேசப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை.

No comments: