Tuesday, March 8, 2011

லிபியா கலவரம் எதிரொலி: 'பெட்ரோல், டீசல் விலை உயரும்'

சென்னை: லிபியா கலவரம் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.


சென்னை கோட்டூர்புரத்தில் சென்னை பொருளாதார கல்லூரியும் (மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்) தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் இணைந்து ஒருங்கிணைந்த எம்.எஸ்சி பொருளாதாரம், எம்.எஸ்சி நிதி உள்ளிட்ட முதுகலை பட்டப்படிப்புகள் கொண்டு வர முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை பொருளாதார கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவில் சி.ரெங்கராஜன் பேசியதாவது:

லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலருக்கும் அதிகம் (ரூ.4500). எனவே பெட்ரோல் விலை உயர்வில் சில மாற்றங்களை செய்யவேண்டி உள்ளது. நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு கவலை அளிக்கிறது. இருப்பினும் இன்னும் சில வாரங்கள் பொருத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மார்ச் மாதம் மாதத்திலிருந்து குறையத் தொடங்கும். காய்கறி விலை பிப்ரவரி மாதத்திலிருந்து குறைந்து வருகிறது. மார்ச் இறுதிக்குள் மேலும் விலை குறையும் என்று நம்புகிறேன். வெங்காயத்தின் விலை முழுக்க கட்டுக்குள் வந்துள்ளது, என்றார்.

No comments: