Saturday, March 19, 2011

அ.தி.மு.க.வை எதிரியாக நினைத்து போட்டியிடுவோம்; நடிகர் கார்த்திக் பேட்டி

நாடாளும் மக்கள் கட்சி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக்கின் வீட்டில் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன.

விருப்ப மனுக்களை நடிகர் கார்த்திக் பெற்றுக்கொண்டு, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

அதனைத்தொடர்ந்து, நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு எங்களை அவர்கள் அழைக்கவில்லை. அதனால், அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம்.

அ.தி.மு.க.வினர் எங்களை ஏமாற்றி விட்டார்கள். எங்கள் கட்சி கொடியையும் அவமதித்து விட்டார்கள். நான் தி.மு.க.வை எத்தனையோ முறை எதிர்த்து பேசியிருக்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு எந்த தொந்தரவையும் செய்யவில்லை.

இந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிரியாக நினைத்து போட்டியிடுவோம். அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமேஇல்லை. அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த எந்த சுயமரியாதை கட்சியும் மீண்டும் அங்கு செல்லமாட்டார்கள்.

தமிழ்நாட்டில், 3-வது அணி என்பது ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இப்போது அதற்கு சாத்தியம் இல்லை. நாடாளும் மக்கள் கட்சி முதலில் 41 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தது. தற்போது, 25 முதல் 30 தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறோம்.

இந்த தேர்தலில் பெண்கள் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எங்கள் கட்சி சார்பில் சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர் தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இதேபோல், தென்மாவட்டங்களிலும் போட்டியிடுகிறோம்.

எங்கள் கட்சி வேட்பாளர்கள் ஓரிருநாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.

No comments: