Monday, March 7, 2011

இது காங்கிரஸ் வீழ்ச்சியின் ஆரம்பம்! - சீமான்

புதுக்கோட்டை: இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இனி இந்த மண்ணிலிருந்து அந்தக் கட்சி துடைத்தெறியப்பட வேண்டும், என்றார் இயக்குநர் சீமான்.


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார்.

அவர் கூறியதாவது:

"காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தமிழினத்துக்கான வெற்றி. மத்தியில் காங்கிரஸ் அரசிடம் இருந்து விலகிக் கொள்வதாக திமுக அறிவித்துள்ளது.

இதைத்தானே கடந்த ஆண்டே சொன்னோம், கதறினோம், கூட்டம் போட்டு, பேரணி நடத்தி மன்றாடினோம், ஏன் செய்யவில்லை, இதை ஒரு வருடத்துக்கு முன்னதாகவே செய்திருந்தால் என் இனம் அழியாமலாவது இருந்திருக்குமே. பதவி சுகம் தீர்ந்துவிட்டது அதுக்காக விலக்கிக்கொண்டுள்ளீர்கள்.

தமிழகத்தில் இந்த முறை தோற்பவர்களும், ஜெயிப்பவர்களும் இனி எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழ்நாடு தமிழனுக்கானது, இங்கு தமிழன்தான் ஆளமுடியும். உன்னதமான விடுதலக்காக முத்துக்குமார் உயிர் பிரிந்துள்ளார்.

என்னை வலிமைமிக்க தலைவனாக மாற்ற அவருக்கு நேர்ந்த தொல்லை, பிரச்சனை ஏராளம். முத்துக்குமாரை நம்பி எந்த வேலையை ஒப்படைத்தாலும் நாம் நிம்மதியாக தூங்கலாம்.

அதை ஈடுகட்ட, அவரது கனவை நிறைவேற்ற ஒரே மருந்து அது, நமது தமிழ் தேசிய இனம் வெற்றி பெறுவதுதான். இதற்கு தோழர்கள்தான் முன்வரவேண்டும். ஒவ்வொருவரும் எறும்புபோல் சுறுசுறுப்பாக வரவேண்டும்.

வருத்தம் தோய்ந்து, காயங்களைச் சுமந்து நிற்கிற நாங்கள் செய்த ஒரே பிழை தமிழர்களாக பிறந்தது மட்டும்தான். ஆனால், இதுதான் பிழை என்று நீங்கள் எண்ணினால் நாங்கள் எத்தனை உயிரையும் இழக்கத்தயார். விலை தலையேயானாலும் பிரச்சனை இல்லை. முத்துக்குமார் சாவு எனக்கு எச்சரிககை விடுத்திருக்கிறது.

காங்கிரஸ் இந்த மண்ணில் இருந்து அகற்றுவதில் நாங்கள் உறுதியாகவும், கவனமாகவும் இருப்போம். நாடு விடுதலை அடைகிறவரை பேசு என்றார் பிரபாகரன். சாகத் துணிந்தவர்கள்தான் தமிழ் இனத்தின் தலைவர்கள்.

முத்துக்குமார் வழக்கில் வரும் 20ம் தேதி வரை காவல்துறைக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். அதன்பிறகு நாங்களே எடுக்கிறோம்.

கலைஞருக்கு முடிவு கட்டுகிறோம். இனத்தை அழிக்க துணை நின்றவரை தூக்கி எறிவோம், பிறகு அதைத் தொடர்ந்து வருபவர்களை புறட்டிப் போடுவோம். தேசியக் கட்சியை ஒற்றைக் கட்சி தூக்கி எறிகிறதோ அததான் இனத்தின் பாதுகாப்புக்கான சாதனை", என்றார்.

No comments: