Monday, November 5, 2012

சி.பி.ஐ. விசாரணை கேட்டு தமிழகம் முழுவதும் 7-ந்தேதி பந்த்: தேவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ., மூவேந்தர் முன்னணிக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையர், தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி.அரசகுமார், பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பியபோது வழிமறித்து 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியதில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்து போனவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என அரசு நிவாரணத் தொகை வழங்கி உள்ளது.

இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் நாளை (6-ந்தேதி) முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த போராட்டம் 7-ந்தேதிக்கு (புதன்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு, பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தேவர் சமுதாய ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 15 அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அமைதியாகவும், நியாயமாகவும், பொதுமக்களின் மன உந்துதலை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெறும். வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதுரையில் தேவர் சமுதாய ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கூட்டத்துக்கு ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்குகிறார். இதில் தேவரின அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பேட்டியின் போது, தேவர் பேரவை இளைஞர் அணி தலைவர் எஸ்.ஆர்.தேவர், தேவர் பேரவை தலைவர் கே.சி.திருமாறன், மூவேந்தர் முன்னணிக்கழக மாவட்ட செயலாளர் பகவதி, அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை தலைவர் கணேஷ் தேவர், வீர விடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்க தலைவர் விஜிதேவர், நாடாளும் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாந்தி பூஷன் ஆகியோர் உடனிருந்தனர்.

LET US ALL SUPPORT FOR THIS STATE WIDE BANDH

No comments: