Thursday, November 29, 2012

சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர்களை சிறையில் அடைப்பதா?: சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பலமுறை பட்டினிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். 

அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மாவட்ட நிர்வாகமும், தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரிகளும், உங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்து போராட்டத்தை முடித்து வைப்பார்கள். ஆனால், அதன் பிறகு அவர்களை கண்டுகொள்வதில்லை. 

சிறப்பு முகாம்வாசிகளும் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்து அதன் பிறகு சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்துகிறார்கள். இதன் பிறகுதான் கடந்த காலங்களில் பலரும் விடுவிக்கபட்டு சாதாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இப்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 ஈழத் தமிழர்களில் பரமேஸ்வரன், தர்ஷன், பிரதீபன் ஆகிய மூன்று பேரும் கடந்த 23ஆம் தேதியிலிருந்து ஒருவர் பின் ஒருவராக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, விடுதலை செய்யாமல், அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றார்கள் என்று வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளது அடக்குமுறை நடவடிக்கையாகும்.

இது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தேசத்தந்தை காந்தியையே அவமதிக்கும் செயலாகும். ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு நிலையான வீடுகளை கட்டித் தர ரூ.25 கோடியை மனிதாபிமானத்துடன் ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர், க்யூ பிரிவினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நம் சொந்தங்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும். இதனை செய்யத்தவறினால், நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டதில் ஈடுபடும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: