Wednesday, November 7, 2012

பெட்ரோல் குண்டு வீச்சு: காயமடைந்தவர்களை  தனியார் மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்தல்


பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

வருவோரை உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும்

என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 தேவர் ஜயந்திக்கு சென்றுவிட்டு சுமோ காரில் திரும்பிக் கொண்டிருந்த மதுரையை அடுத்த

புளியங்குளத்தைச் சேர்ந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

 இச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் இறந்துவிட்டனர்.

 தற்போது அரசு மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராமத்தினர்

வலியுறுத்தி உள்ளனர்.

 இதுதொடர்பாக, புளியங்குளம் ஊராட்சி துணைத் தலைவர் ஏ.அப்துல்பாரி, மாவட்ட

ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தார்.

 பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு

வேலை அளிக்க வேண்டும்.

 பலத்த தீக்காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள்

அனைவரையும், தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய

வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால், அரசு வழங்கிய

நிவாரண உதவிக்கான காசோலையை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தன்னிடம்

ஒப்படைத்துள்ளதாகவும், அப்துல் பாரி தெரிவித்தார்.

 பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசினர்.

 தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல விரும்புவோருக்கு, அதற்கான

நடவடிக்கையை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

No comments: