Wednesday, November 28, 2012

மதுரை பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒரு வாலிபர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த மாதம் 30-ந்தேதி தேவர் குருபூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பஸ், கார்களில் சென்று அஞ்சலி செலுத்தினர். மதுரை அருகே உள்ள எஸ்.புளியங்குளத்தை சேர்ந்த 20 பேர் ஒரு காரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்பினர். மதுரை சிந்தாமணி ரிங் ரோட்டில் வந்தபோது மர்ம கும்பல் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியது.

இதில் காரில் இருந்த அனைவரும் உடல் கருகினர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஜெயபாண்டி (வயது 18), சுந்தரபாண்டி (19), வெற்றிவேல் (24), தேசிங்குராஜா, ரஞ்சித்குமார், விஷ்ணுபிரியன் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். அன்புசெழியன் மகன் சிவராமன் (19) என்பவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 

நோய் குணமாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை சிவராமன் திடீரென இறந்துவிட்டார். இவர் லாரி அதிபர் ஆவார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, சிவராமன் குணமடைந்து வந்த நிலையில் இரவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றனர்.

பின்னர் சிவராமன் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு சிவராமன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புளியங்குளம் கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி எஸ்.புளியங் குளத்தில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றப்பட்டது.

No comments: