Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி: இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு-பாகிஸ்தான் எதிர்ப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக பல நாடுகள் கண்டனக் குரல் எழுப்பி வரும் நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா ஒரு தீர்மானம் தாக்கல் செய்தது. பின்னர் அதில் ஒருசில திருத்தங்கள் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.




இந்த விவாதத்தின்போது அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்தது. தீர்மானத்தில் உள்ள சாதக, பாதகங்களை மற்ற நாடுகளும் பகிர்ந்துகொண்டன. இந்த விவாதத்தின் நிறைவு நாளான இன்று இந்தியா தனது கருத்தை பதிவு செய்தது. அப்போது இலங்கையில் 13-வது அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டும், அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும், போர் நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முக்கிய அம்சங்களை இந்திய பிரதிநிதி வலியுறுத்தினார்.



ஆனால் இந்த பரிந்துரைகள் அமெரிக்க தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை. அதன்பின்னர் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. பாகிஸ்தான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இதனால் அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது.

No comments: