Friday, March 22, 2013

விடுதலைப்புலிகள் சிந்திய ரத்தம் வீண் போகாது: தனி ஈழம் மலரும் - வைகோ பேட்டி

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட விக்ரமின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மதியம் 12 மணியளவில் நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விக்ரம் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.




பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஈழப்பிரச்சினைக்காக பசியோடும், பட்டினியோடும் போராடி வருகிறார்கள். இது போன்ற எழுச்சி இதுவரை எங்கும் ஏற்பட்டதில்லை. இந்த போராட்டங்கள் முடிந்து விடாது. இன்னும் புதிய புதிய வடிவங்களில் உருவெடுக்கும்.



1965-க்கு பின்னர் மாணவர்கள் ஒன்று திரண்டு இலங்கை தமிழர்களுக்காக போராடுவதை பார்த்து மத்திய அரசு பயந்து போய் உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மூலம்தான் ஈழப்பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முயல வேண்டும்.



முத்துக்குமாரில் தொடங்கி தம்பி விக்ரம் வரை 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். தமிழக இளைஞர்களின் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். இதற்கு மேல் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.



இலங்கையில் விடுதலைப்புலிகள் செய்த தியாகமும், அவர்கள் சிந்திய ரத்தமும் நிச்சயம் வீண் போகாது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட்டு தனி ஈழம் மீண்டும் மலரும். இன்று தம்பி விக்ரம் வைத்த நெருப்பால் கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சம் வெதும்பி போய் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.



இவ்வாறு வைகோ கூறினார்.



No comments: