Saturday, March 16, 2013

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: சீமான் பேச்சு

உலக நுகர்வோர் தினவிழாவையொட்டி தென்இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் சார்பில் மாநில மாநாடு மற்றும் நுகர்வோர் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது. முதலில் தென்மாவட்ட செயலாளர் ரவிபாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி கோரிப்பாளையம் பகுதியில் தொடங்கி மாநாடு அரங்கை அடைந்தது. மாநாட்டிற்கு தென் இந்திய தலைவர் வக்கீல் கு.மணவாளன் தலைமை தாங்கினார்.




தென்இந்திய பொதுச்செயலாளர் வக்கீல் சிங்கராசு முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் ஈரோடு வீரபத்திரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-



நமது நாட்டில் எதுவும் தரமாக கிடைப்பதில்லை. கல்வி, மருத்துவம், பஸ், விமானம் என்று தரம் கெட்டு தான் கிடைக்கிறது. நமது நாட்டில் நமக்கு எந்த உரிமை இருக்கிறது. சொந்த மொழியில் வழக்காட முடியுமா? நாம் தமிழன் என்று பெருமிதம் கொள்ள உரிமை இல்லை. அப்படி சொன்னால் நம்மை தமிழ் தீவிரவாதி என்கிறார்கள்.



கடலில் மீன்பிடிக்க காவேரி, முல்லை ஆற்றில் மீன்பிடிக்க உரிமை இல்லை. நாம் உரிமை இழந்து அடிமையாகி உள்ளோம். டெல்லியில் பெண் கற்பழித்து இறந்த சம்பவத்தில் மந்திரிகள் முதல் அனைவரும் கொதித்து எழுந்தனர்.



ஆனால் இலங்கையில் 30 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இறந்த சம்பவத்தை கேட்க இங்கு யாருக்கும் நாதியில்லை. ஐ.நா.வில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானம் இல்லை, அவமானம். அந்த அறிக்கை இலங்கைக்கு எதிராக இருக்காது. எனவே ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.



கூட்டத்தில், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கை மீது கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்து கொடூரன் ராஜபச்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கப்பலூர் சரவணன், மாநில அமைப்பு செயலாளர் சாகுல் அமீது, மாநில இணைச் செயலாளர் தியாகராஜன், தென்மாவட்ட செயலாளர் ரவிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments: