Saturday, March 2, 2013

3 ஆண்டுகளில் 21வது முறையாக உயர்கிறது பெட்ரோல் விலை: இம்முறை ரூ. 1.40 உயர்வு

பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்த பின், 21வது முறையாக தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 1.40 வரை உயர்கிறது.




மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் விட்டுக்கொடுத்தது. இதன் பின்னர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை பெட்ரோல் விலை 28 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 8 முறை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 1.40 வரை உயரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 16ம் தேதி பெட்ரோல் விலை ரூ. 1.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.







இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 128.57 டாலரில் இருந்து 131 டாலராக உயர்ந்த காரணத்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த காரணத்தாலும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளன. மேலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும், வரும் காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இது எதிரொலிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளன. பெட்ரோல் விலை உள்ளூர் வரிகள் தவிர்த்து ரூ. 1.40 உயர்த்தப்படுவதால், சில்லரை விலையில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







பெட்ரோல் தவிர்த்து டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 11.26ம், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 33.43ம், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ. 439ம் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையின் காரணமாக ஆண்டொன்றுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சுமார் 86, 500 கோடி அளவிற்கு நிதி இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





No comments: