Tuesday, March 19, 2013

60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு

மத்திய அரசு ஆண்டு தோறும் திரைப்பட துறையைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 60-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.




தேர்வுக் குழுவின் தலைவர் பாசு சாட்டர்ஜி விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்தார்.



இந்த ஆண்டில் தமிழ் திரைப்பட துறைக்கு 5 விருதுகள் கிடைத்து உள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படமாக டைரக்டர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய ஒப்பனையாளர் ராஜா தேசிய அளவில் சிறந்த ஒப்பனையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.



கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படத்துக்கு நடனம் அமைத்த பிர்ஜூ மகாராஜ் தேசிய அளவில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பெற்று இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய லால்குடி என்.இளையராஜா சிறந்த ஆர்ட் டைரக்டருக்கான விருதை பெற்று உள்ளார்.



டைரக்டர் பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் பணியாற்றிய பூர்ணிமா ராமசாமி சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை பெற்று உள்ளார்.



தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக திக்மான்சு துலியா இயக்கிய 'பான்சிங் தோமர்' என்ற படம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு தங்க தாமரை விருதும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.



சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான விருது சூஜித் சர்க்கார் இயக்கிய 'விக்கி டோனர்' என்ற இந்தி படத்துக்கு கிடைத்து இருக்கிறது. இந்த படத்துக்கு தங்க தாமரை விருதும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். சிறந்த நடிகர் இர்பான் கான் 'பான்சிங் தோமர்' படத்தில் கதாநாயகனாக நடித்த இர்பான் கான், 'அனுமாதி' என்ற மராத்தி படத்தில் நடித்த விக்ரம் கோகலே ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.



‘தக்‘ என்ற மராத்தி படத்தில் நடித்துள்ள உஷா ஜாதவ் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய சிவராஜ் லோடன் பட்டீல் தேசிய அளவில் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு அனு கபூர் (படம்: விக்கி டோனர்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை நடிகைக்கான விருதை ‘விக்கி டோனர்’ படத்தில் நடித்த டோலி அலுவாலியா, ‘தணிச்சாலஞ்சன்’ மலையாள படத்தில் நடித்த கல்பனா ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ‘தணிச்சாலஞ்சன்’ படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ்தத் விருதும் கிடைத்து உள்ளது.



சிறந்த பின்னணி பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும் (இந்தி படம்: சிட்டகாங்), சிறந்த பின்னணி பாடகிக்கான விருது சம்தாவுக்கும் (மராத்தி படம்: ஆர்த்தி அங்லேகார்டிகேகர்) கிடைத்து உள்ளது.



'சம்தா' படத்துக்கு இசை அமைத்த சைலேந்தர் பார்வேயும், ‘காளியச்சன்’ மலையாள படத்துக்கு இசையமைத்த பிஜி பாலும் சிறந்த இசையமைப்பாளர் விருதை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.



சிறந்த பாடலாசிரியருக்கான விருது பரசூன் ஜோஷிக்கு (படம்: சிட்டகாங்) கிடைத்து இருக்கிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை மாஸ்டர் வீரேந்திர பிரதாப் (இந்தி படம்: தேக் இந்தியன் சர்க்கஸ்), மாஸ்டர் மினான் (மலையாள படம்: 101 சோடியங்கள்) ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.



சிறந்த தெலுங்கு படத்துக்கான விருது ‘ஈகா’ என்ற படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த ஸ்பெஷல் எபெக்டுக்கான விருதும் இந்த படத்துக்கு கிடைத்து இருக்கிறது. இந்த படம்தான் தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியானது.



தேர்ந்து எடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பின்னர் நடைபெறும். விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.

No comments: