Friday, March 1, 2013

உலகை உலுக்கிய பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள்: ஐ.நா. தீர்மானத்தால் ஒன்றும் நடக்காது என கூறும் தமிழ் ஆர்வலர்கள்

ஈழம்... இதுதான் எங்களின் எதிர்காலம் என்ற நம்பிக்கையுடன் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த இலங்கை தமிழர்களின் வாழ்வில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இடியென இறங்கினார் ராஜபக்சே. கருணா போன்ற துரோகிகள் போட்டுக் கொடுத்த பாதையில் 20 நாடுகளை துணைக்கு சேர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் குண்டு வீசி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.
இறுதிக்கட்ட போரில் குழந்தைகள், பெண்கள் குலை நடுங்க வைக்கும் வகையில் போர்க்கள விதிகளையும் மீறி கொடூரமாக சாகடிக்கப் பட்டனர். இப்போரில் வீர மரணம் அடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், பிடித்துவைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டபடக் காட்சிகள் பதை பதைக்க வைத்தன.ஏதும் அறியாத பாலச்சந்திரன் மேலாடையின்றி அப்பாவித் தனமாக பிஸ்கெட் சாப்பிடும் காட்சியும், கொலையுண்ட பின் குண்டு காயங்களுடன் பிணமாக கிடக்கும் காட்சியும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறது. இதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்பியுள்ள நிலையில், ஐ.நா. மாமன்றத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.இது தொடர்பாக இன்னும் வெளிப்படையான எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. இதுபற்றி வெளியுறவு துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே கூறும் போது, இலங்கைக்கு இன்னும் அழுத்தம் கொடுப்போம் அவர்கள் எடுக்கப்போகும் முடிவுக்கு ஏற்ப இந்தியா கடைசி நேரத்தில் தனது முடிவை அறிவிக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளார். ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தால் இலங்கையில் அடுத்து நடக்கப் போவது என்ன? தீர்மானம் வெற்றி பெற்றால் அங்கு மிச்சமிருக்கும் 8 லட்சம் தமிழர்களின் வாழ்வு வளப்பட்டு விடுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் அடுக்கடுக்காக எழுகிறது. இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தில் மனித உரிமை மீறல் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்குற்றம் என்றோ, இனப்படு கொலை என்றோ எந்தவித வார்த்தைகளும் இடம் பெற வில்லை. அதே நேரத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமே ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது. இதனால் இலங்கை தமிழர்களுக்கு நன்மைகள் எதுவும் நடந்து விடப்போவதில்லை என்றும், வாக்கெடுப்பு நடத்தி ஈழ மக்களின் மன நிலைக்கேற்ப தனி நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-இன அழிப்பில் ஈடுபட்ட சிங்களர்களுடன் இணைந்து இனி தமிழர்கள் எப்படி வாழ்வார்கள்? இனப் படுகொலை என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டாலே கொலை செய்யப்பட்ட இனத்தினர் அழித் தொழிப்பில் ஈடுபட்ட இன்னொரு இனத்தினருடன் சேர்ந்து வாழ முடியாது என்கிற நிலை தானாகவே ஏற்பட்டு விடும். அப்போது தமிழர்களுக்கு என்று தனி நாடு உதயமாவதற்கான வாய்ப்புகள் தென்படும். நட்பு நாடு எப்போ தெல்லாம் இது போன்று இலங்கை தமிழர்கள் பிரச்சினை உச்சநிலையில் இருக்கிறதோ அந்த நேரத்தில் ராஜபக்சே சாமி தரிசனம் செய்யப் போவதாக கூறிக் கொண்டு இந்தியாவுக்கு வருவார். அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.இலங்கை எங்களது நட்பு நாடுதான் என்பதே உலக நாடுகளுக்கு உணர்த்தவே இந்தியா இப்படி நடந்து கொண்டு வருகிறது. இது நாள் வரையில் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம் போதும். இனியாவது இலங்கை மீது பொருளாதார தடையை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விதிக்க வேண்டும். அதே நேரத்தில் சிங்களனுடன் நீ இணக்கமாக வாழப் போகிறாயா? இல்லை தனியாகத்தான் இருக்கப் போகிறாயா? என்று அங்குள்ள தமிழனிடம்தான் கேட்க வேண்டும்.சிங்களர்களுடன் இணக்கமாக வாழ அவர்களை வற்புறுத்தக் கூடாது. நிர்கதியாக தவிக்கும் லட்சக் கணக்கான தமிழர் களின் வாழ்க்கை வளப்படுவதற்கு தனி ஈழ நாடு ஒன்றே நிரந்தர தீர்வாகும். இலங்கை பிரச்சினை உள் நாட்டு பிரச்சினை என்று கூறும் ராஜபக்சே, போர் நடக்கும் போதும் அப்படி கூறியிருக்க வேண்டியதுதானே. 20 நாடுகளின் துணையுடன் விடுதலைப்புலிகளை அழிப் பதற்கு மட்டும் உலக நாடுகள் வேண்டுமா?திபெத்திய விடுதலை, தெற்கு சூடான் விடுதலை ஆகியவற்றை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழர்களுக்கும் இலங்கையில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் பிரதியை வாங்கியுள்ள இந்தியா அதனை படித்துப்பார்த்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்று இறுதியான முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.அதே நேரத்தில், தீர்மானத்தில் இலங்கைக்கும், ராஜபக்சேக்கும் எதிராக கூறப்பட்டுள்ள சில கருத்துக்களை நீக்குமாறு இந்தியா வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் கதையாக இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவது அம்பலமாகி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?.

No comments: