Saturday, March 16, 2013

தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தாலும் மாணவர்களின் போராட்டம் தொடரும்

தமிழக அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தாலும் தங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, ஐ.நா. கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள் இன்றும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும், போர் குற்றவாளியான ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தில் சென்னையில் நந்தனம் கல்லூரி மாணவாகள் 2வது நாளாக இன்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் 22 மாணவர்கள் 2வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.



இதனிடையே மாணவர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு நேற்று கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அளித்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 20ந் தேதி, தமிழகம் முழுவதும் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர்களின் இந்த போராட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



No comments: