Tuesday, March 26, 2013

வசிய திலகம்!

கடுமையான யோகங்கள், தியானங்கள் செய்யும் போது, மனிதர்கள் மற்றும் விலங்கினங்களினால் இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு வகையான வசிய திலகத்தை சித்தர் பெருமக்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக சிவயோகம் செய்திடும் போது இத்தகைய திலகத்தை அணிந்து கொண்டனர் என்கிற தகவல் இராமதேவர் அருளிய "இராமதேவர் சிவயோகம்" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.




அந்த பாடல்கள் பின்வருமாறு..



ஆமப்பா சிவயோகத் திருக்கும்போது

அருளான திலர்தவகை யொன்றுகேளு

நாமப்பா சொல்லுகிறோ மண்டத்தோட

நலமான மரமஞ்சள் கஸ்தூரிமஞ்சள்

தாமப்பா சாதிக்காய் சாதிப்பத்திரி

தாழம்பூத் தாளுடனே சந்தனமும்பூவுங்

காமப்பால் கல்மதமுங் கஸ்தூரிகோவுங்

களங்கமற்ற புழுகுடனே கற்ப்பூரங்கூட்டே.



கூட்டப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்

குறிப்பாக வோரிடையா யெடுத்துக்கொண்டு

நாட்டப்பா கல்வமதிற் பொடித்துக்கொண்டு

நலமான பழச்சாறும் பன்னீர்வார்த்து

ஆட்டப்பா வடிமிளகு போலேமைந்தா

வரைக்கையிலே புழுகிட்டு அரைத்துநன்றாய்

நீட்டப்பா கயிரதுபோல் நீட்டிக்கொண்டு

நிழலுரத்திப் பதனமதாய் வைத்தக்கொள்ளே.



கொள்ளுகிற விதமென்ன வென்பாயாகிற்

குணமாகச் சிவயோகத் திருக்கும்போது

நல்லுருவாய்த் திலர்தமதை யெடுத்துக்கொண்டு

நாட்டப்பா குருபதிமேற் றிலர்தம்போடச்

சொல்லுகிற மந்திரந்தா னொன்றுகேளு

சுருக்கடா சுவாவென்று திலர்தம்போட்டு

உள்ளுறவா யிடுதயத்தின் மனதைநாட்டி

உம்மெனவே தம்பித்து வொடுங்கிநில்லே.



ஒடுங்கியந்த வொடுக்கமதி லொடுங்கிநில்லு

வுலகத்தி லுள்ளவர்க ளுன்னைக்கண்டாற்

படிந்துவுந்தன் பாதத்திற் பணிவாரையா

பக்குவமாய்ப் பிணியாளர் பணிந்துகண்டால்

நடுங்கிமிகப் பணிந்தோடும் பிணிகளெல்லாம்

நலமான சிவயோகச் செந்தீப்பட்டு

மடிந்துவிடும் பிணிகளெல்லா முலகிலுள்ளோர்

மண்டினிற்பா ருன்சமுகங் கண்டிலாரே.

மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிபத்திரி, தாழம்பூ இதழ், சந்தனம், முப்பூ, காமப்பால், கல்மத்தம், கஸ்தூரி, கோரோசனை, புனுகு, கற்பூரம் ஆகிய பதின்மூன்று சரக்குவகைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். மேலும் அதனுடன் பழச்சாறும் பன்னீரும் சேர்த்து மீண்டும் மைப் போல அரைக்க வேண்டுமாம் அப்போது மிளகு நிறத்தில் அந்த கலவை கிடைக்கும். இந்த கலவையுடன் மேலும் ஒரு பங்கு புனுகு சேர்த்து நன்கு அரைத்து கயிறுபோன்று நீளவடிவாக உருட்டி நிழலில் உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.



சிவயோகம் செய்யும் போது முன்னர் சேமித்த கலவையில் சிறிது எடுத்து புருவமத்தியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டுமாம். அப்போது பார்க்கும் மக்கள் எல்லோரும் பணிந்து வணங்கிச் செல்வார்களாம். அத்துடன் மனிதர்கள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினமும் எந்தவித இடையூறும் செய்யமாட்டார்கள் என்கிறார் இராமதேவர்.



ஆச்சர்யமான தகவல்தானே....

No comments: