Thursday, March 21, 2013

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமல் தமிழ் இனம் ஓயாது: மும்பை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும், போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும், தனி தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை சி.எஸ்.டி.யில் உள்ள ஆசாத் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது.




ஆர்ப்பாட்டத்திற்கு மும்பை மாநகராட்சி கவுன்சிலரும், பணிக்குழு தலைவருமான தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தாராவி, செம்பூர், பாந்திரா, அந்தேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'இலங்கைக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆசாத் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெறாத அளவிற்கு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இதுவாகும். நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், மாணவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-



அப்பாவி பெண்கள், குழந்தைகள் என ஈவு, இரக்கம் ஏதுமின்றி பாரபட்சம் பார்க்காமல் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிங்கள நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள், போலீசார்கள் வெளியேற்றப்பட வேண்டும். சிங்களத்தில் நடந்த போர் குற்றம் குறித்து பன்னாட்டு பொது விசாரணை நடத்த வேண்டும். போர் விதிமுறைகளை மீறிய இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இந்திய அரசு எவ்வித பொருளாதார நடவடிக்கைகளும் இலங்கையுடன் மேற்கொள்ளக்கூடாது.



இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது இந்திய அரசு ஆயுதங்களை சப்ளை செய்தது. தமிழர்களை கொன்றுகுவிக்க இந்திய அரசே குழி பறித்தது. இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும் குற்றவாளிகள் ஆவார்கள்.



இலங்கையில் தமிழர்களின் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களை இலங்கை அதிபர் ராஜபக்சே இடித்து தள்ளினார். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க வேண்டியது ஆகும். தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் அடுத்தகட்ட போர் நடைபெறும்.



தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட இலங்கைக்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக திரள்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கென தனி ஈழம் அமையும் வரையிலும் இந்த போராட்டங்கள் ஓயாது. என்னுடைய உயிர் இருக்கும் வரையிலும் நான் இலங்கை தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டே இருப்பேன்.



கண்டிப்பாக நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வெற்றி கிட்டும். அதுவரையிலும் அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். பல்வேறு வரலாற்று சிறப்பம்சம் வாய்ந்த இந்த ஆசாத் மைதானத்தில் அடுத்து விடுதலை தமிழ் ஈழ விழாவும் இங்குதான் நடக்கும்.



இவ்வாறு வைகோ பேசினார்.

No comments: