Tuesday, April 19, 2011

மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வேண்டும்; அவகாசம் இல்லாததால் அரசியல் கட்சிகள் தவிப்பு

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ந்தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பதால் 13-ந்தேதி மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும்.

என்றாலும் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபை கூடுதல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு ஆகியவற்றுக்கான கால அவகாசம் மிகவும் குறைவாகவே உள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய இன்னும் 23 நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கிறது.

ஆனால் அமைச்சரவை பதவி ஏற்பு, சட்டசபையை கூட்டி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பது போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் இல்லை. இதனால் அரசியல் கட்சிகள் தவிப்பில் உள்ளன.

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு 17-5-2006 அன்று காலை 9.30 மணிக்கு 13-வது சட்டசபை கூடியது. அதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். அரசியல் சட்ட விதிகளின்படி தமிழகத்தின் 14-வது சட்டசபை 17-5-2011 காலை 9.30 மணிக்குள் கூடி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

அதற்கு தற்காலிக சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். முன்னதாக தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றவர்களின் அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்கான தகவல்கள் முறைப்படி அனுப்பப்பட்டு அனைவரும் வரவேண்டும்.

யாராவது பதவி ஏற்க வரமுடியாத சூழ்நிலை இருந்தால் அவரது பதவியை முடக்கி வைப்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கலாம். தேர்தல் முடிவு எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

எனவே முக்கிய கட்சிகளும், போட்டியிட்ட வேட்பாளர்களும், தேர்தலில் பணிபுரிந்த தொண்டர்களும் “திக்... திக்.. மன நிலையிலேயே உள்ளனர். முடிவை அறிய ஒரு மாத அவகாசம் கொடுத்த தேர்தல் ஆணையம், அமைச்சரவை, சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு போன்ற முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை.

இது குறித்தும் தேர்தல் ஆணையம் முன்னதாகவே அரசியல் நிபுணர்களிடம் ஆலோசித்து தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணும் தேதியை முடிவு செய்திருக்க வேண்டும் என்பது அரசியல் பிரமுகர்களின் கருத்தாக உள்ளது.

No comments: