Wednesday, April 20, 2011

யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; “தமிழ் இன விடுதலை போராட்டம் தொடரும்” டைரக்டர் சீமான் அறிக்கை

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி என்ற நம் தமிழ் உறவு ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை கண்டு மனம் பொறுக்காமலும், தமிழர்கள் இன்னும் அங்கு படும் இன்னல் கண்டு நேற்று அதிகாலை 5 மணி அளவில் 3 லிட்டர் பெட்ரோலை தன் மீது ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு தன் இன்னுயிரைப் போக்கிக் கொண்டார் என்னும் துயரச் செய்தி என் நெஞ்சில் இடியாய்த் தாக்கியது. அவருக்கு நாம் தமிழர் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மண்ணில் இன்னும் இனமானம் அற்றுப் போய் விடவில்லை அது இன்னும் நீறு பூத்த பெரு நெருப்பாக அனைவரின் நெஞ்சிலும் இருக்கிறது என்று அப்துல்ரவூப் தொடங்கி, முத்துக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட இப்பொழுது தன் இன்னுயிர் துறந்த கிருட்டிணமூர்த்தி போன்ற எத்தனையோ மானமுள்ள மறத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்தச் சமூகத்தின் செவிட்டுக்காதில் மட்டும் எம் தமிழ்ச் சொந்தங்களின் கூக்குரலும் அவர்கள் படும் துயரமும் இன்னம் விழவில்லை. இனம் வீழ்ந்தது அழுவதற்கு அல்ல, மீண்டும் எழுவதற்கு என்றும் அதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதால் உயிரைக் போக்கிக் கொள்வது போன்ற அளப்பரிய தியாகச் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் எம் சொந்தங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் லட்சிய உறுதி கொண்ட கிருஷ்ண மூர்த்தி போன்ற மறத்தமிழர்கள் எதற்காக தம் இன்னுயிரை இழந்தார்களோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதே சமயத்தில் இனியொரு கிருஷ்ண மூர்த்தி தோன்றாமல் இருப்பது, நமது கையில்தான் இருக்கிறது.

தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் போராட்டப் பாதையை நாம் தொடர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: