Monday, April 4, 2011

கடைசிவரை காங்கிரசை எதிர்த்தால் ரங்கசாமிக்கு தோள் கொடுப்போம்; சீமான் பேச்சு

காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறு கீழவீதியில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிப்பதும், வருங்கால சந்ததியினருக்கு காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி இருந்தது என்ற நினைவே தெரியாத வகையில் அதனை வேரறுப்பதும்தான் நமது லட்சியம். இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதி யுத்தத்தில் என் இன மக்கள் கொத்து கொத்தாய் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாம் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் சிங்களர்கள் மீதான கோப நெருப்பை தனது உடலில் அள்ளித் தெளித்துக் கொண்டு தனது உயிரை தியாகம் செய்த தம்பி முத்துக்குமாரின் கனவு காங்கிரசை அழிப்பது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஒரே நல்ல தலைவர் ரங்கசாமி மட்டும்தான்.

ஆனால் அந்த நல்ல மனிதரையும் கட்சிக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாத கட்சி காங்கிரஸ் கட்சி. அவரும் பொறுத்திருந்து பொறுத்திருந்துதான் பார்த்தார். அவரால் முடியாத பட்சத்தில் கட்சியை விட்டு வெளியே வந்து விட்டார். என்.ஆர். காங்கிரஸ் பிறந்தது. காங்கிரஸ் செத்து விட்டது. அந்த கட்சி இனிமேல் வாழப்போவது இல்லை.

தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். அய்யா ரங்கசாமி கடைசி வரை காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற ஒன்றைத்தான் நாங்கள் கேட்கிறோம். அவர் கடைசி வரை காங்கிரசை எதிர்த்து நின்றால் நாங்கள் அனைவரும் உங்கள் தோளோடு தோள் நிற்போம்.

550 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொலை செய்தபோது இந்திய அரசு என்ன செய்தது? தமிழக அரசு என்ன செய்தது? அருகிலுள்ள நாகை மாவட்டம் புஷ்பவனம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் உள்ள சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்களா? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தரவு கூறினார் ளா? அல்லது இனிமேலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை அனுமதிக்க செய்ய மாட்டோம் என்று கண்டனக்குரல் எழுப்பினார்களா? இல்லையே! எத்தனையோ தமிழச்சிகளின் தாலியை அறுத்த காங்கிரஸ் கட்சியை வேரறுக்காமல் விட மாட்டோம்.

ஆட்சி மாற்றத்தால் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. எனவே அரசியல் மாற்றம் ஒன்றுதான் வழி. ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முதல் படி காங்கிரஸ் கட்சியை இந்த நாட்டை விட்டு அழிப்பதுதான். வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேறோடு அழித்து விரட்டுங்கள். அதற்கு எங்கெங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்களோ அத்தனை பேரையும் தோற்கடியுங்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.

No comments: