Sunday, April 3, 2011

மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறிய அதிரடி காட்சிகள்

மதுரை: மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்ற மதுரை சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன்ற்று போயவிட்டன. இன்னொருபுறம் அழகிரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும்படி யாரையும் நிர்பந்திக்கவில்லை என சகாயம் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலூர் அருகே கோவில் ஒன்றில் ரகசிய திட்டம் தீட்டுவதற்காக கூடியிருந்த அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை படம்பிடித்த தாசில்தாருக்கு அடி விழுந்ததில் இருந்து மதுரை பரபரப்பாகி விட்டது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகித்த மதுரை உடன்பிறப்புகள் சகாயத்தை மாற்ற வேண்டும் என்ற அதிரடி கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் அதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்கவில்லை.
தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கை தேர்தல் அதிகாரி என்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆர்.டி.ஓ.சுகுமாரன் தான்நிர்பந்திக்கப்பட்டதாக கூற அடுத்த பரபரப்பு ஆரம்பம் ஆனது. அவர் கடிதம் எழுதியதாக உடன்பிறப்புகள் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட கடிதமும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி குறிந்து அறிந்த தேர்தல் ஆணையம் அந்த அதிகாரியை வேறு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து மதுரை தி.மு.க. உடன் பிறப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

பாராபட்சமின்றி செயல்படுகிறேன்; சகாயம்

இதனிடையே நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியதாவது;
நான் எந்தச் சூழலிலும் அவர் (சுகுமாறன்) கூறுவது போல, ஒருபோதும் நிர்ப்பந்தித்தது இல்லை. யாராவது அப்படி கூறுவார்களா? அரசு ஊழியராக பணியாற்றும் அவர் பொய் பேசக் கூடாது. தேர்தல் கமிஷனிடம் அவர் எப்படி புகார் தெரிவித்துள்ளார் என்றே எனக்கு தெரியவில்லை. நான் நடுநிலையோடு செயல்படுகிறேன். தேர்தல் கமிஷன் உத்தரவை பாரபட்சமின்றி நிறைவேற்றுகிறேன். தேர்தல் விதிமுறைகளை சுதந்திரமாக நிறைவேற்றும் என்மீது கட்சிசாயம் பூசாதீர்கள். தேர்தல் கமிஷனில் ஆர்.டி.ஓ., புகார் செய்ய என்ன அவசியம் உள்ளது. நியாயமாக தேர்தல் நடத்த எண்ணும் என்னை ஏன் தொந்தரவு செய்கின்றனர்? மேலூர் சம்பவத்தில் தாசில்தார் புகார் கொடுத்துள்ளார். அது தொடர்பாக எதையும் கூட்டியோ, குறைத்தோ இல்லாமல், மனசாட்சியுடன் நடந்து கொள்ளும்படி கூறியுள்ளேன். ஆர்.டி.ஓ.,விடம் இதுகுறித்து நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேர்தல் கமிஷனிடம் நான் விளக்கம் தெரிவிப்பேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார்.

சுகுமாறன் விவகாரம் குறித்து வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஞானகுணாளன் கூறுகையில், ""கலெக்டர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறும் ஆர்.டி.ஓ., சுகுமாறனை கண்டிக்கிறோம். இதில் ஏதோ அரசியல் சூழ்ச்சி உள்ளது,'' என்றார்.

No comments: