Monday, April 18, 2011

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; டைரக்டர் சீமான் அறிக்கை

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டைரக்டர் சீமான் கூறி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற எம் தாய்த்தமிழ் உறவுகள் விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் இன்று நம்மிடம் இல்லை. இதுவரை 3 மீனவர்களின் உடல்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் நமக்கு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் அழுகிய நிலையில் நேற்று தலை இல்லாத நிலையின் மீனவர் மாரிமுத்துவின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வந்தபோது இனி ஒரு தமிழ் மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்ற சோனியாவின் வாக்குறுதிகள் இன்னும் நம் காதுகளில் எதிரொலிக்கின்ற நிலையில் இப்பொழுது கொலை செய்யப்பட்டுள்ள 4 மீனவர்களின் உறவினர்களின் ஒப்பாரி நம் தேசமெங்கும் கேட்பாரற்று எதிரொலிக்கிறது.

நேற்று இதேபோல மீன் பிடிக்கச் சென்று அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்களை எதிரி நாடு என்று சொல்லப்படும். பாகிஸ்தான் அரசு சட்டப்படி கைது செய்துள்ள நிலையில் நட்பு நாடு என்று இவர்களால் சொல்லப்படும் இலங்கை அரசோ நம் நாட்டு எல்லையில் மீன் பிடித்த 4 தமிழ் மீனவர்களைக் கொலை செய்துள்ளது. இங்கு கிரிக்கெட் பார்க்க வந்து இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த ராஜபக்சே அதனைச் சகிக்காமல் கொலைப் படையை தமிழக மீனவர்கள் மீது ஏவியுள்ளார்.

ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம், உண்ணாவிரதம் என நம் போராட்ட வழிமுறைகள் தொடரும் நிலையில் சிங்கள அரசால் தமிழக மீனவர்களின் படுகொலைகளும் நிற்காமல் தொடருகின்றன. இதற்கு என்ன தான் தீர்வு? தனது உறுதிமொழியை மீறி மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொடுக்குமா? அல்லது குறைந்தபட்சம் பொருளாதா ரத்தடை விதிக்குமா? இது நடைபெறாத நிலையில் நம் மீனவர்கள் அவர்களின் பாதுகாப்புக்கு யாரையும் நம்பாமல் அவர்களே காத்துக்கொள்ளும் நிலை நோக்கி செல்லத் தொடங்கும் பயணத்தை எடுத்து வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments: