Tuesday, April 12, 2011

இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடுதலைப் புலிகள் பகீர் தகவல்

"இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னையில், அவர் துரோகம் செய்துவிட்டார்' என, விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான, "பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகள், கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. கருணாநிதியின் எதிர்காலமும், கேள்விக்குறியாக இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில், கருணாநிதி நாடகம் ஒன்றை ஆரம்பித்தார்.

டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. "இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்' என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோதும், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்.

போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதற்கு, கருணாநிதி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார் கனிமொழி. இது, இலங்கைத் தமிழர்களிடையே இருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.இதற்காக, கனிமொழிக்கும் புலிகள் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. தந்தையிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார் கனிமொழி. இதன்மூலம், கூண்டோடு ராஜினாமா என்ற கருணாநிதியின் அறிவிப்பு, முழுக்க முழுக்க நாடகம் என்பது உறுதியானது.

கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments: