Wednesday, October 29, 2014

பசும்பொன்னில் நாளை 107-வது தேவர் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் இன்று அரசியல் சொற்பொழிவு விழா நடைபெற்றது. நாளை குருபூஜை விழா நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 107–வது ஜெயந்தி விழா மற்றும் 52 குருபூஜை விழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2–ம் நாளான இன்று தேவரின் அரசியல் சொற்பொழிவு விழாவாக கொண்டாடப் பட்டது. இன்று காலை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 2 நாள் யாக சாலை பூஜையை தொடங்கி வைத்தார். இதில், நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், கமுதி பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு, தொழிதிபர் ராமசந்திரபூபதி, புத்திருத்தி காசிநாதன், அகில இந்திய மூக்குலத்தோர் பாசறை தலைவர் சிற்றரசு தேவர், பொருளாளர் இந்திர குமார் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 2–ம் நாள் விழாவில் தேவரின் அரசியல் சொற் பொழிவுகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (29–ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவில் அ.தி.மு.க. சார்பில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜ், செந்தூர் பாண்டி, உதயகுமார், விஜயபாஸ்கர் மற்றும் வாரிய தலைவர்கள் தங்க முத்து, முருகையா பாண்டியன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பொன் முத்துராமலிங்கம், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ஐ.பெரியசாமி உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதேபோல் ம.தி.மு.க. சார்பில் வைகோ, பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தர் ராஜன் மற்றும் தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் நாளை நடக்கும் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். தலைவர்களின் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பசும்பொன், கமுதி, அபிராமம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சுற்று வருகின்றனர். வஜ்ரா வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. கூடுதல் டி.ஜி.பி. (சட்டம், ஒழுங்கு) ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

No comments: