சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகள் கையொப்பம் வழங்கும் முறையை தமிழக அரசு ரத்து செய்து அறிவித்து உள்ளது.
சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகள் கையொப்பம் வழங்கும் முறை ரத்து செய்தது தொடர்பாக தமிழக அரசின் பணியாளர் சீர்திருத்த துறையின் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம் வருமாறு:–
சான்றொப்பம் முறை
குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகள் சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் வழங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்த நடைமுறை மக்களுக்கு பயன் அளிக்காததோடு அவர்களின் நேரத்தையும் வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த நடைமுறையை மாற்றவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மக்களின் சிரமத்தை குறைப்பது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பது ஆகியவற்றில் பிரச்சினைகள், அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகள் தேங்குவதை குறைத்தல், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையை மறு பரிசீலனை செய்யப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது சான்றொப்பம் இடப்பட்ட நகல்களோடு அசல் சான்றிதழ்களும் தேவைப்படுகின்றன. எனவே சான்றொப்பம் இடும் நடைமுறை உண்மையில் எந்தவித பயனையும் தரவில்லை.
ரத்து
மறு ஆய்வுக்கு பிறகு அனைத்து அரசு துறைகளிலும் சான்றொப்பம் நடைமுறையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து துறைகளிலும் குரூப் ஏ, பி பிரிவு அதிகாரிகள் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும்.
அதற்கு பதிலாக சான்றிதழின் உரிமையாளர்கள் சுயசான்றொப்பம் அளிக்கும் முறையை அனுமதிக்க வேண்டும். நேர்காணல் அல்லது பணிநியமனத்தின்போது அசல் சான்றிதழ்களை காண்பிக்கும் போது அறிவுறுத்தவேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment