Wednesday, October 15, 2014

சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்துவ நிபுணர் விளக்கம்


சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து, சென்னை விஜயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் பாபு ராஜேந்திரன் கூறியதாவது:- சென்னை நகரம் முழுவதும் ஒரு வகையான கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இது எந்த வகை கண் நோய் என்றில்லாமல், பொதுவாக மெட்ராஸ்-ஐ என்று கூறுகின்றனர். ‘மெட்ராஸ்-ஐ’ என்பது ஒரு வைரஸ் பாதிப்பாகும், வைரஸ் பாதிப்பாக இருந்தாலும் கூட, இது பாக்டீரியா பாதிப்பாக மாற வாய்ப்பு உள்ளது. கண் நோய் பரவியவர்கள் மற்றவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது காற்றில் பரவும் நோயாகும். எனவே, கண் நோய் பரவிய பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அலுவலகங்களுக்கு செல்லக்கூடாது. பொதுவாக, கண் நோய் பரவாமல் இருக்க கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், கண் நோய் பரவியவர்கள் பயன்படுத்திய துண்டு, தலையணைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், கண் நோய் பரவியவர்கள், மருந்து கடைகளில் சென்று ஏதாவது ஒரு மருந்தை வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கண் நோய் பாதிப்புள்ளவர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை போட்டால் பாதிப்பு ஏற்படும். கண் நோயால் பாதித்தவர்கள், கண்களை சுத்தமான நீரில் நன்கு கழுவிக் கொண்டு நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். கண் நோய் அதிகரித்தால், உடனடியாக டாக்டர்களை அணுகுவது நல்லது. இது போன்ற கண் நோய் எந்த வைரசால் வருகிறது என்பது முதன் முதலில் சென்னையில் கண்டு பிடிக்கப்பட்டதால், இதற்கு மெட்ராஸ்-ஐ என்று பெயர் சூட்டினார்கள். பொதுவாக இந்த நோய் மழைக்காலங்களில் வரும். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் இந்த நோய் பாதிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: