Tuesday, October 28, 2014

பசும்பொன் தேவர் குருபூஜை விழா:


பசும்பொன்னில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்கள்.

குருபூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்திவிழா மற்றும் 52-வது குருபூஜைவிழா இன்று (28-ந்தேதி) ஆன்மிக விழாவுடன் தொடங்குகிறது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேசுவர சுவாமிகள் குழுவினரின் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும், அரசு விழாவும் நடக்கிறது.

மு.க.ஸ்டாலின், வைகோ

குருபூஜை விழாவில் (30-ந்தேதி) தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தேசிய பார்வர்டு கட்சி சார்பில் அரசகுமார், நடிகர் கருணாஸ் உள்பட அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன்பின் நடைபெறும் அரசு விழாவில் பயனாளிகளுக்கு தமிழக அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் வலியுறுத்தி உள்ளார்.

விருது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், தென்மண்டல பொறுப்பாளர் பாண்டிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நிருபர்களிடம் ஸ்ரீதர் வாண்டையார் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தினத்தன்று தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. வருகிற ஆண்டில் முத்துராமலிங்கதேவர் பெயரிலும் விருது வழங்க வேண்டும்.

தடையை நீக்குக

சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட மருதுபாண்டியர்கள், புலித்தேவன், தேவர் குருபூஜை விழா அன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்ற தடை இருப்பதால் ஏழை-எளிய மக்கள் அஞ்சலி செலுத்த வர முடியாத நிலை உள்ளது. எனவே தேவர் பூஜை அன்று 144 தடை உத்தரவை நீக்கி மக்கள் எளிதாக கலந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், மாநில மகளிரணி செயலாளர் ஒச்சாத்தேவர் சுந்தரசெல்வி, மாநில துணைத்தலைவர்கள் ஆறுமுகம் நாட்டார், நாகலிங்கம், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீதர் வாண்டையார் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் தூக்கலிடப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

No comments: