Tuesday, October 28, 2014

தேவர் குருபூஜை விழா: மதுரை நகருக்குள் 2 நாட்கள் லாரிகள் நுழைய தடை


தேவர் குரு பூஜை விழாவுக்கு மதுரை வழியாக செல்லும் வாகனங்கள் எப்படி செல்ல வேண்டும் என்று மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மதுரை மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: – தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்பவர்களில் பலர் முளைப்பாரி ஊர்வலம், பால்குடம் எடுப்பது வழக்கம். அவ்வாறு மேற்கொள்பவர்கள் போலீசாரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே ஊர்வலங்கள் நடத்த வேண்டும். குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்று, அங்கு அளிக்கப்படும் அனுமதி சீட்டை வாகனங்களின் முன்பு ஒட்ட வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது. அவ்வாறு சட்டத்தை மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவின் போது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாகவும் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவர் குருபூஜைக்கு வாகனங்களில் செல்பவர்களுக்கான வழித்தடங்கள் பின்வருமாறு:– நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, பெரியார் பஸ்நிலையம், மேற்கு வெளிவீதி, வடக்கு வெளிவீதி, யானைக்கல் கல்பாலம், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேளக்கார தெரு, கோரிப்பாளையம், தேவர் சிலை, பனகல் ரோடு, குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம், ராமநாதபுரம் சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் முடக்குச்சாலை, தேனி மெயின்ரோடு, காளவாசல், அரசரடி, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், பாலம் ஸ்டேஷன் ரோடு, மேளக்காரத்தெரு, கோரிப்பாளையம், தேவர் சிலை, பனகல் ரோடு, ஆவின் ஜங்ஷன், குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம், ராமநாதபுரம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாத்திமா கல்லூரி, கொன்னவாயன் சாலை பாலம், மேளக்கார தெரு கோரிப்பாளையம் தேவர்சிலை வழியாக செல்ல வேண்டும். லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை (29–ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (30–ந் தேதி) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மதுரை நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. மதுரை நகரின் எல்லையில் லாரிகளை நிறுத்தி வைக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: