Sunday, October 26, 2014

பசும்பொன் தேவர் சிலைக்கு மீண்டும் தங்க கவசம் அணிவிப்பு


மதுரையில், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்ககவசம், குரு பூஜையையொட்டி வெளியே எடுத்து வரப்பட்டு பசும்பொன் தேவர்சிலைக்கு நேற்று மீண்டும் அணிவிக்கப்பட்டது.

தங்க கவசம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 30.10.2010 அன்று பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரிடம் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கசிவசாமிகள் மற்றும் பொதுமக்கள் தேவர்சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார். கடந்த ஆண்டு குருபூஜைக்குப்பின் இந்த தங்ககவசம் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டு மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107-வது ஜெயந்திவிழாவும், குருபூஜையும் நடைபெற உள்ளன.

மீண்டும் அணிவிப்பு

இதையொட்டி மதுரையில் வங்கி பாதுகாப்பு பெட்டத்தில் இருந்த தங்ககவசம் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் தேவர் நினைவாலாய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் விழாக்குழுவினர் முன்னிலையில் தேவர் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தங்க கவசம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்மதுரை வருகை

முன்னதாக, வங்கியில் இருந்து தங்க கவசத்தை கையெழுத்திட்டுப் பெறுவதற்காக, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவரை, அமைச்சர் செல்லூர்ராஜூ, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தமிழரசன் உள்பட பலர் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளைக்கு வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டபின், தங்க கவசம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் பெற்று போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.

பின்பு மாலை 4 மணியளவில் அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

No comments: