Monday, October 24, 2011

தேவர் ஜெயந்தி விழாவுக்கு 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: வாகனங்களில் மேற்கூரையில் அமர்ந்து செல்ல தடை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104-வது ஜெயந்தி விழா மற்றும் 49-வது குருபூஜை விழா வருகிற 27 முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தமிழக உள்துறை செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா தலைமை தாங்கினார். டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஜி.பி. ராமானுஜம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 9 மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த விழாவில் பாதுகாப்புக்காக ஏற்கனவே 8 போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கூடுதலாக 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 6000-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு டி.ஐ.ஜி. தலைமையில் பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்படும். இந்த பாதுகாப்பு வருகிற 27-ந்தேதி முதலே மேற்கொள்ளப்படும்.

அதேபோல விழாவுக்கு செல்லும் மக்கள் வாகனங்கில் மேற்கூரையில் அமர்ந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிற தரப்பினர் மனம் பாதிக்கும் வகையில் வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்கள் எழுப்பக்கூடாது.
மேலும் காவல் துறையினர் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து செல்லக்கூடாது. மிகவும் பதற்றமான பகுதிகளாக கருதப்படும் இடங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

No comments: