Sunday, October 30, 2011

"கேம்பஸ்' கொலைகள்: மாணவ சமுதாயம் செல்வது எங்கே

பத்து நாட்களுக்கு முன், மதுரை புதூர் ஐ.டி.ஐ., மாணவர் பாண்டியராஜன் கொலை, நான்கு நாட்களுக்கு முன் சென்னை இந்துஸ்தான் பல்கலை பொறியியல் மாணவர் ரஞ்சித் மத்துவார் கொலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பொறியியல் மாணவர் த்ருபா ஜோதி துட்டா கொலை... என உயிர்பதைக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தேறின. மூன்று உயிர்களும், சக மாணவர்களால் பறிக்கப்பட்டது தான் வேதனையின் உச்சம்.


விக்ரம் ராமசுப்ரமணியம் (மனநல டாக்டர்,ஆஹானா மருத்துவமனை, மதுரை): திடீரென்று ஒருவன் வன்முறையாளனாக மாறுவது, சினிமாவில் நடக்கும் காட்சி. நிஜவாழ்வில், சிறுவயதிலிருந்தே வன்முறையும், சீரழிவும் பழகியவர்கள் தான் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். கல்லூரிப் பருவத்தில் "கவுன்சிலிங்' ஓரளவு கைகொடுக்கும். ஆனால் பள்ளிப் பருவம் தான், மாணவர்களை மேம்படுத்தும் சரியான பருவம். ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர்களை கண்காணிக்க வேண்டும். பெற்றோர் திட்டினால் தம்பி,தங்கையை அடிப்பது, ஆசிரியர் திட்டினால் சகமாணவரை அடிப்பது என... தங்களது பிரச்னைகளுக்கு வடிகால் தேடும் மாணவர்கள், பின்னாளில் இந்த இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அடிதடியில் ஈடுபடுகின்றனர்.சினிமாவில் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் வேலையை, மிக வேகமாக செய்து வருகின்றனர். நாலு பேரை அடித்தால் தான் "ஹீரோ' என ஆழ்மனதில் பதிய வைக்கின்றனர். போதாதற்கு, "வீடியோ கேம்ஸ்' விளையாட்டுகள், "வன்முறை சரியே' என்பது போல சித்தரிக்கிறது. ஆட்களின் மேல் காரை ஏற்றிக் கொல்லும் ரேஸ், நூறு பேரை அடிக்கும் ஹீரோ... இதை விட்டால் மாணவ சமுதாயத்திற்கு, நல்ல விஷயங்கள் எதுவும் கிடைப்பதில்லை.இவை இரண்டையும் முதலில் தடை செய்யுங்கள். இயல்பிலேயே வன்முறையை பார்த்து, வளர்ந்தவர்கள், கல்லூரிப் பருவத்தில் கட்டுப்படுத்த ஆளில்லாமல் திசைமாறுகின்றனர். அதோடு குடிப்பழக்கமும் சேர்ந்து கொள்ள... தாங்கள் செல்லும் பாதை சரியா... என்பதை யோசித்து பார்ப்பதில்லை. ஐந்தில் வளையாதது, 18ல் வளையாது. 18ல் திருத்தப் பார்க்கவேண்டும். ஆனால் ஐந்தில் இருந்தே... நல்ல பழக்கவழக்கங்களை, மனித மதிப்புகளை கற்றுத்தர வேண்டியது, பெற்றோர், ஆசிரியர்களின் கடமை

No comments: