Monday, October 31, 2011

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவிக்கவேண்டும்

கோவில்பட்டி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென கோவில்பட்டியில் பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா பசும்பொன்னில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டியிலுள்ள பசும்பொன் தேசிய கழக தென்மண்டல அலுவலகத்தில் கழக நிறுவனத்தலைவர் வெள்ளை ச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டு பொதுமக்களால் தெய்வீகத்திருமகன் என்றழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான அன்னதான பந்தல் இன்று (அக்.29) பசும்பொன்னில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கழகத்தின் சார்பில் தொடர்ஜோதி ஓட்டம், முளைப்பாரி ஊர்வலம் துவங்கி ஜெயந்தி விழா நடைபெறும் தேவர் நினைவிடத்திற்கு நாளை (அக்.30) வந்தடைகிறது. தேவர்ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுதவிர நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் மதுரை ஏர்போர்ட்டிற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது, மறவர், கள்ளர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என்று அறிவிக்கவும், முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் முத்துராமலிங்க தேவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் தியான மண்டபம், தெப்பக்குளம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் வெள்ளைச்சாமித்தேவர் தெரிவித்தார். அப்போது பசும்பொன் தேசிய கழக பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துராஜ், தூத்துக்குடி மேற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாநில தொழிற்சங்க செயலாளர் உதயாநாராயணன், மாநில பொருளாளர் ராமர், மாநில தொண்டரணி தலைவர் ஜஸ்டின், கோவில்பட்டி நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் இருந்தனர். இந்நிலையில் நாளை (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம் தலைமையில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் அருகேயுள்ள தேவர் சிலைக்கும், கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தேவ ர் சிலைக்கும் மாலை மரியா தை செய்துவிட்டு ஏராளமான பசும்பொன் தேசிய கழகத்தினர் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்

No comments: