Wednesday, October 19, 2011

போராட்டத்தை தூண்டும் வகையில் பேசுவதா?- அணுசக்தி ஆணைய தலைவருக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கக் கூடியது என்பதால் அதனை மூடிவிட வேண்டும் என்று கோரி அப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நவம்பர் இறுதிக்குள் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க தொடங்கும் என்று இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் சிறீகுமார் பானர்ஜி அறிவித்திருப்பது, தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அணு உலைகள் தொடர்பாக அறைகுறையாக அறிந்து வைத்திருக்கும் அணு உலை எதிர்ப்பாளர்களின் தூண்டுதலே கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டம் என்று சிறீகுமார் பானர்ஜி வர்ணித்திருப்பது அச்சத்தில் உள்ள மக்களை உதாசீனப்படுத்தும் வார்த்தைகளாகும். அப்பகுதி மக்களின் அச்சங்களை போக்கும் வகையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன் மோகன்சிங் உறுதியளித்தார்.

இதுவரை நிபுணர் குழு அமைக்கப்படவில்லை. மக்களின் அச்சத்தைப்போக்கும் வரை அணு உலை தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. ஆனால் இவை எதையும் கருத்தில் கொள்ளாமல், அணு உலை இயக்கம் தொடர்பான பணிகள் சுவிட்ச்சை இயக்கி விளக்கை அணைப்பது போன்றதல்ல. அது நிறுத்தப்படாது என்று சிறீ குமார் பானர்ஜி கூறியிருப்பது போராட்டத்தை தீவிரப்படுத்தி, அதன் மூலம் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பேச்சாகும்.

அணுமின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டுதான் நாட்டின் மின் தேவையை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்பது போல் பிரதமரும், அணுசக்தி அறிவியலாளர்கள் பலரும் பேசி வருவது வியப்பளிக்கிறது. இன்றுள்ள நிலையில் நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணுமின் உலைகளில் இருந்து கிடைக்கும் மின் சாரத்தின் அளவு வெறும் 3 விழுக்காடுதான், 97 விழுக்காடு மின்சாரம் நீர் மின், அனல் மின் திட்டங்களில் இருந்தும், அணு உலைகளில் இருந்து கிடைப்பதை விட அதிகமாக காற்றாலைகளில் இருந்துதான் கிடைக்கிறது.

எனவே அணு மின் நிலையங்கள் இல்லை யென்றால் எதிர்காலத்தில் நமக்கு மின்சாரமே இருக்காது என்பது போல் பிரதமர் பேசுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: