Sunday, October 23, 2011

தீபாவளி வரை இரவில் மின்வெட்டு உண்டு: மின் துறை வட்டாரம்

தீபாவளி பண்டிகை காரணமாக, அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்திலும் மின்வெட்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. "தீபாவளி வரை இரவு நேர மின்வெட்டு தொடரும்' என, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னையில் ஒரு மணிநேரம், மாவட்டங்களில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. இதில், இரவு நேரங்களில் மின்வெட்டை அமல்படுத்துவதில்லை. சில நேரங்களில், திடீர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் மட்டும், இரவு நேரங்களில் மின் தடை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் அனைத்து துணிக் கடைகள், ரெடிமேட் தயாரிப்பு நிறுவனங்கள், பரிசுப் பொருள் விற்பனை கடைகள், பரிசுப் பொருள் தயாரிப்பகங்கள், பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில், இரவு, பகல் பாராமல் பணிகள் நடக்கின்றன.சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தொழிற்சாலைகளிலும், பணிகள் சூடுபிடித்துள்ளன. அதுமட்டுமின்றி, கடைகளில், பண்டிகை கால கூடுதல் மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கடைகள், ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் ஆடம்பர வண்ண விளக்குகள் அதிகரித்துள்ளன. இதனால், மின்சாரத் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், இரவு நேரங்களிலும் மின்வெட்டு அமலாகிறது. தீபாவளி பண்டிகை கால மின் பயன்பாடு அதிகரித்ததால், தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்துள்ளதாக, மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments: