Monday, October 31, 2011

தமிழகத்தில் தி.மு.க.வின் கூடாரம் காலியாகி வருகிறது : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேச்சு

கடையநல்லூர் : தமிழகத்தில் திமுகவின் கூடாரம் காலியாகி வருவதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். நெல்லை புறநகர் வடக்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற யூனியன் தலைவர்கள் செல்லம்மாள், முருகையா, பானுமதி, தங்கமாரி மற்றும் டவுன் பஞ்.,துணைத் தலைவர்கள் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை சந்தித்து சால்வை அணிவித்தனர். அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் அமோக ஆதரவை அளித்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்களுக்கும், மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழகத்தில் அதிமுகதான் தகுதி வாய்ந்த இயக்கம் என கருதிய தமிழக மக்கள் சட்டசபை தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றியை அளித்துள்ளனர்.

இந்த வெற்றியை பொறுத்தவரை கடந்த 4 மாத அதிமுக அரசின் சாதனைக்கும், அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கும் மக்கள் அளித்த நற்சான்றிதழ் ஆகும். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை சட்டசபை தேர்தலில் திமுகவை அடியோடு மக்கள் புறக்கணித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு மீண்டும் அதே முடிவினை தந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் விரோத நடவடிக்கை தான் கையாளப்பட்டதன் காரணமாகத்தான் திமுகவிற்கு இதற்கான பதிலை மக்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் தந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கரைய துவங்கியவிட்டது. திமுக கூடாரம் காலியாகி வருகிறது. அந்த கட்சியில் காணப்படும் சர்வாதிகார சக்திகளை எதிர்த்து திமுகவினரே புகார்களை கூறி வெளியேறி வருவதை தமிழக மக்கள் பார்க்க துவங்கிவிட்டனர். குடும்பம் தான் கட்சி என கருணாநிதி செயல்படுவதாக திமுகவினரே புகார் கூறும் அளவிற்கு திமுகவின் நிலை பரிதாபமாக காணப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் நலத்திட்ட பணிகள் நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக அமைவதற்கு அனைத்து நடவடிக்கையும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் வெள்ள சேதத்தினை தவிர்க்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சருடன் சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,துணைத் தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் மாரியப்பன், இணை செயலாளர் நடராஜன், நகராட்சி தலைவர் வக்கீல் மோகனகிருஷ்ணன், நகர செயலாளர் கிட்டுராஜா, கவுன்சிலர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, செங்கோட்டை குருசாமி உடனிருந்தனர்.

No comments: