Thursday, October 24, 2013

தேவர் குருபூஜை: விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை

தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்கள் விதிமுறைகளை மீறினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு மானாமதுரை டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் தேவர் குருபூஜை விழாவுக்கு போலீஸார் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூர், பூவந்தி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், உளவுப் பிரிவு போலீஸார் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மானாமதுரை டி.எஸ்.பி. (பொறுப்பு) மங்களேஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இங்கு குருபூஜைக்கு செல்லும் அனைத்து வாகனங்களின் ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் அனுப்ப வேண்டும். வாடகை வாகனங்கள் வந்தால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். சொந்த வாகனங்களில் வருபவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களின் அனுமதிச் சீóட்டு வாங்காமல் வந்தாலும் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றார். மேலும் அவர் குருபூஜைக்கு மானாமதுரை போலீஸ் துணைக் கோட்டத்தில் போலீஸார் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளை விளக்கினார். .

No comments: