Wednesday, October 23, 2013

தேவர் ஜயந்தி: உண்ணாவிரதம் இருக்க முயன்றோர் கைது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதை விலக்கவேண்டும் எனக்கோரி உசிலம்பட்டி, மதுரையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மணிகண்டன் உள்ளிட்டோர் பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கமுயன்றனர். உடனே உசிலம்பட்டி போலீஸார் அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். மதுரையில் தேவர் தேசியப் பேரவை சார்பில் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவைத் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் 16 பேர் கோரிப்பாளையம் பகுதியில் திரண்டனர். உடனே அவர்களை அங்கிருந்த போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மறியல்: மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு தேவர்குல மாணவர் கூட்டமைப்பினர் பழனிவேல் தலைமையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி, மதுரையில் கைதான பார்வர்டு பிளாக் மற்றும் தேவர் தேசியப் பேரவையினரை விடுவிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். அண்ணாநகர் போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. .

No comments: