Saturday, October 12, 2013

அஞ்சலி செலுத்த செல்வோருக்கான விதிமுறைகள் காவல்துறை அறிவிப்


சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டத்தில் மருதுபாண்டியர் நினைவு நாள் விழா அக். 27 ஆம் தேதி நடைபெறவிருப்பதால், காளையார்கோயிலுக்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமை வகித்தார். கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விளக்கினார். நினைவஞ்சலி செலுத்தச் செல்பவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில்தான் செல்லவேண்டும். வாடகை வாகனம் அமைத்துச் செல்ல அனுமதி கிடையாது. இரண்டு சக்கரம், டிராக்டர், மினிவேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. நடைபயணமாக செல்லவும் அனுமதியில்லை. திறந்தநிலை வாகனங்களில் செல்லக்கூடாது. வாகனங்களின் கேரியர்கள் மற்றும் ஏணிப்படிகள் கழற்றப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து செல்லக்கூடாது. வாகனங்களில் ஆயுதங்களையோ, வெடிக்கக்கூடிய பொருள்களையோ எடுத்துச்செல்லக்கூடாது. வாகனங்களில் இருக்கைகள் தவிர மற்ற இடங்களில் அமர்ந்து கொண்டோ தொங்கிக்கொண்டோ செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்லவேண்டும். அனைத்து வாகனங்களும் காவல்துறையினர் சொல்லும் இடத்தில் ஒன்று கூடி காவல் துறையின் வழிக் காவலுடன் மட்டுமே சென்று திரும்பவேண்டும். நினைவு நாளுக்குச் செல்லும் வாகனங்களின் பதிவு எண், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை 3 நாள்களுக்கு முன்பாகவே அந்தந்த காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். காவல்துறை வழங்கும் அனுமதி அட்டை ஒவ்வொரு வாகனத்திலும் ஒட்டப்பட்டிருக்கவேண்டும். அனுமதி அட்டை ஒட்டப்படாத வாகனங்கள் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்பப்படும். விழாவுக்குச் செல்லும் வாகனங்களில் செல்பவர் பெயர், முகவரி பட்டியல் சம்மந்தப் பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. பிளக்ஸ் போர்டுகள், தட்டி போர்டுகள்,பேனர்கள் இவற்றை காவல்துறை அனுமதி யின்றி வைக்கக்கூடாது. காவல்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் அந்த பேனர்களில் எழுதப்படும் வாசகங்களை முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். பேனர் களை வைப்பவரே பாதுகாப்பு பொறுப்பையும் ஏற்கவேண்டும். வாகன வழித்தடத்தில் அமைந்துள்ள ஊர்களைக் கடந்து செல்லும்போது டிரம்செட் போடுவது, கோஷம் போடுவது கூடாது. பட்டாசு கண்டிப்பாக வெடிக்கக்கூடாது. வாகனங்களில் கண்டிப்பாக ஒலி பெருக்கி அமைத்துச் செல்லக்கூடாது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் வாகனங்களில் செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை காவல்துறை அறிவித்துள்ளது.

No comments: