Tuesday, October 29, 2013

தேவர் ஜயந்தி: நாளை நகரில் லாரிகளுக்கு தடை.

மதுரை நகரில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு 30-ஆம் தேதி (புதன்கிழமை) லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து வழியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகச் செய்திக்குறிப்பு விவரம்: புதன்கிழமை தேவர் ஜயந்தியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 30-ஆம் தேதி காலை 4 மணி முதல் அன்று மாலையில் நடைபெறும் ஊர்வலங்கள் முடியும் வரை நகருக்குள் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. விழாவுக்கு வரும் வாகனங்களைத் தவிர்த்து மற்ற வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்ல அனுமதி இல்லை. புதுநத்தம் சாலை, அழகர்கோயில் சாலை வழியாக வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் இருந்து திரும்பி மாற்றுப்பாதை வழியாக ராஜாமுத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின்சந்திப்பு, அண்ணாநகர் பிரதான சாலை, பி.டி.ஆர்.பாலம், காமராஜர் சாலை வழியாகச் செல்லவேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பிலிருந்து நத்தம் சாலைக்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், இளைஞர் விடுதி, ரேஸ்கோர்ஸ் சாலை, தாமரைத் தொட்டி, புதுநத்தம் சாலை வழியாகச் செல்லவேண்டும். வடக்குவெளிவீதியிலிருந்து யானைக்கல் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் சாலை, எம்.எம்.லாட்ஜ் சந்திப்பிலிருந்து கான்சாபுரம் சாலையில் திரும்பி, இ2இ2 சாலை, அரசன் ஸ்வீட்ஸ் சந்திப்பு வழியாகச் செல்லவேண்டும். திண்டுக்கல் சாலை-தத்தனேரி வழியாக வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேஷன் சாலை-குலமங்கலம் சாலை சந்திப்பில் திரும்பி குலமங்கலம் சாலை வழியாக மாற்றுப்பாதைகளில் செல்லவேண்டும். ஊர்வலங்கள் செல்லும் சாலைகளான அண்ணாசிலை சந்திப்பு, கீழமாசி வீதி, விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, அழகர்கோயில் பிரதான சாலை, பாலம் ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. மேற்படி சாலைகளில் உள்ள இணைப்பு சாலைகளில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். ஆகவே, 30-ம் தேதி தேவர்ஜயந்தியை முன்னிட்டு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் நலன்கருதி மாற்றுப்பாதையை தாற்காலிகமாக பயன்படுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. .

No comments: