Tuesday, October 22, 2013

வாகனங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் சோதனைச்சாவடிகள்

மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழாக்களுக்கு வரும் வாகனங்களை கண்காணித்து ஆவணங்களை ஆய்வு செய்ய மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் சிறப்பு போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது வரும் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவும், 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அந்தந்த காவல்நிலையங்களில் வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. இந்நிலையில் மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழாவுக்களுக்கு வரும் வாகனங்களை கண்காணிக்கவும் அவற்றை சோதனையிடவும் மானாமதுரை அருகே மேலப்பசலை, திருப்புவனம் அருகே மணலூர் ஆகிய இரு இடங்களில் போலீஸ் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட உள்ளனர். இந்த சோதனைச் சாவடிகளில் இணைய தள இணைப்புடன் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டு வாகன ஆவணங்களை சரிபார்க்க வட்டார போக்குவரத்து அலுவலங்களைச் சேர்ந்த அலுவலர்களும் பணியமர்த்தப்படவுள்ளனர். மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழாவுக்களுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களின் அடையாள கடிதம் இருந்தால் தான் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படும். போலி ஆவணங்கள் தயாரித்து வரும் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை கைது செய்யவும் மானாமதுரை, திருப்புவனம் பகுதி காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. .

No comments: