Wednesday, October 9, 2013

“தம்பி உனக்கு முத்துராமலிங்கம்’னு பேர் வைக்கலனா ஒரு வயசுலேயே நீ செத்து போயிருப்பப்பா”- நெஞ்சை உருக வைக்கும் உண்மைச்சம்பவம்


இணையத்தில் உலவும் போது “ஓஹோ புரடக்ஷன்” என்ற வலைத்தளம் ஒன்று கண்ணில் பட்டது. அந்தத் தளத்தின் ஆசிரியர் image திரு.முத்துராமலிங்கம் (தேவர் இனத்தவர் இல்லை). அவரது கதைகளும் கருத்துகளும் எழுத்து நடையும் மிக அருமை. அவருடைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இப்பதிவு கண்ணில் பட்டது. இது அவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம், அவருடைய வாழ்க்கையின் ஆரம்பம், அவரது மறுபிறவி. இதைப் படியுங்கள், பரப்புங்கள். இதைப் படித்த பின்பாவது ஸ்ரீ தேவர் திருமகனாருக்கு எதற்கு குருபூஜை? எதற்கு முடிக்காணிக்கை? எதற்கு பால்குடம்? எதற்கு முளைப்பாரி? என்பதை சில ஈனர்கள் புரிந்துகொள்ளட்டும். அவர் உண்மையில் தெய்வப் பிறவியே, இறை தூதரே என்பதை அவர்கள் அறியட்டும் இதோ அவரே பேசுகிறார், கேளுங்கள். (அவர் எழுத்துக்களில் எள்ளளவும் மாற்றமின்றி)… என் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேரை வச்சே? இந்தப்பதிவை எழுதலாமா, வேண்டாமா என்று ஓராயிரம் முறை யோசித்திருப்பேன்.எனக்கு சாதியத்தில் எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை.ஆனால்....? ‘தெரியுமா.., அந்த முத்துராமலிங்கம் நம்ம சாதி கிடையாதுடா., இவ்வளவு காலமா நல்லா நாம ஏமாந்துக்கிட்டு இருந்திருக்கோம்.' -இப்படிப்பொருள்படும் வார்த்தைகளை, நான் எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்தே ,தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில், நான் மதிக்கும் பெரியபெரிய மனிதர்களிடமிருந்து கூட கேட்டிருக்கிறேன். நாம் அவர்களிடம் நான் முத்துராமலிங்கம் என்று மட்டும் தானே அறிமுகமானோம். நடுவில் எங்கிருந்து சாதி வந்தது? என்று யாரையும் நான் கோவித்துக்கொள்ள முடியாது ? ஏனெனில் எனது இந்தப்பெயரை தேவர் சமூகத்தினர் தவிர யாரும் வைத்ததாக நானும் கேள்விப்பட்டதில்லை. எனது கிராமத்தில் 5வது படிக்கும் வரை இந்தப்பெயர் குறித்து எந்தப்பிரச்சினையையும் நான் சந்தித்ததாக நினைவில்லை. ஆனால் 6 வது படிக்க அண்டை கிராமமான சத்திரரெட்டியபட்டிக்கு போன உடனே,அந்த பள்ளியில் நூற்றுக்கு பத்து முத்துராமலிங்கங்கள் இருந்தார்கள். நான் படித்த ‘பி’ செக்‌ஷனில் மட்டுமே என்னையும் சேர்த்து நாலு முத்துராமலிங்கங்கள்.எங்கள் ஒவ்வொருவரையும், இனிஷியலோடு சேர்த்த பட்டப்பெயர் வைத்தே மற்ற மாணவர்கள் அழைத்தார்கள். இங்கே தான் எனது பெயர்ப்பிரச்சினை ஆரம்பமானது. எதற்கான சண்டையாக அது துவங்கியிருந்தாலும், வேற சாதிப்பய நீ எப்பிடிடா,எங்க தேவரையா பேர வச்சிக்கலாம்? என்றே அந்த சண்டைகள் பெரும்பாலும் முடியும். என்ன இருந்தாலும் நாங்க அப்ப சின்னப்பசங்கதான?. நான் வீட்டுக்குப்போனவுடன் அம்மாவின் புடவை முந்தானையைப்பிடித்தபடி’எனக்கு ஏம்மா முத்துராமலிங்கம்னு பேரு வச்சே? என ஓங்கி அழ ஆரம்பித்துவிடுவேன். உடனே அம்மா நடுங்கும் குரலில்,’ தம்பி உனக்கு அந்தப்பேர வக்காமப்போயிருந்தா ஒரு வயசுலேயே உன்ன குழி தோண்டிப்புதைச்சிருப்பமப்பா’ என்ற அழுதபடி ஒரு கதை சொல்லத்துவங்குவார். என் தாய்க்கு நான் எட்டாவது கடைக்குட்டி. அப்பா விருதுநகருக்கு அதிகாலை பால் சப்ளை செய்கிற ஒரு சிறு வேலையோடு முடித்துக்கொண்டு,அப்புறம் முழுநேர சீட்டுவிளையாட்டுக்கு போய்விடுவாராதலால், குடும்பத்தைதாங்கும் பெரும்பாரம் அம்மாவிடமே இருந்தது. இதனால், விவசாயம் போக வீட்டுவாசலிலேயே எங்களுக்கு ஒரு சிறு பெட்டிக்கடையும் இருந்தது. அப்போது நான் ஒரு வயசுத்தொட்டில் குழந்தை.என்னைத்தொட்டிலில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தபோது, வெளியே கடைக்கு சாமான் வாங்க வந்த யாரோ சத்தம் போட்டு அழைக்க என் அம்மா தொட்டிலை சற்று இழுத்து ஆட்டிவிட்டுவிட்டு, கடைக்கு வியாபாரம் பார்க்க போய்விட்டார்கள். இழுத்து ஆட்டப்பட்ட தொட்டிலானது, சுவரிலிருந்த மாடக்குழியின் விளக்கை நலம் விசாரிக்க, நான் படுத்திருந்த காட்டன் சேலையில் தீப்பிடித்துக்கொண்டது. என் அழுகுரல் அதிகரித்ததை நெருப்பு பற்றிக்கொண்டதோடு தொடர்பு படுத்தி அறிந்துகொள்ளமுடியாத அம்மா ,சற்று தாமதமாகவே வீட்டுக்குள் வர நான் கழுத்துக்கு கீழே வெந்து முடிந்திருந்தேன். விஷயம் ஊர்முழுக்கப்பரவி, வீட்டுமுன் திரண்டுவிட்டார்கள்.’புள்ள பொழக்கிறது கஷ்டம்’ என்று நினைத்து ஏறத்தாழ எல்லோரிடமிருந்தும் சாவுக்கான அழுகையே வந்திருக்கிறது.இருந்தாலும் மனசு கேட்காமல் மாட்டுவண்டி பூட்டிக்கொண்டு விருதுநகர் லைஸாண்டர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்கிறார்கள். நான் ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் டாக்டர் லைஸாண்டரைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.கைராசியான டாக்டர் என்பார்களே அந்த வகையில் முக ராசியான டாக்டர் அவர். அவரைப்பார்த்த உடனேயே பல பேருக்கு நோய் போய்விடும். ஏழை விவசாயிகள் சிகிச்சைக்குபோனால், கையில எவ்வளவு வச்சிருக்க? என்று விசாரித்து, அதை நீயே வச்சிக்கோ’ என்றபடி சிலசமயங்களில் வழிச்செலவுக்கும் பணம் கொடுத்துவிடுவார். இதோ மருத்துமனைக்கு வந்துவிட்டேன். என்னைப்பார்த்த லைஸாண்டருக்கு நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை துளியும் வரவில்லை.என் அப்பாவையும் சகோதரர்களையும் பார்த்து சொந்தக்காரவங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பிடுங்க. முகம் தவிர எல்லாப்பாகமும் நல்லா வெந்துரிச்சி. ட்ரீட்மெண்ட் குடுக்கிறதால எந்த பிரயோசனமும் இல்லை என்று கையைவிரித்துவிட்டார். இப்போது இழுத்துக்கோ,பறிச்சிக்கோ’என்று கிடக்கும் எனது வெந்த உடலை வெளியே எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வருகிறார்கள். என் கூடப்பிறந்தவர்களே ஏழுபேர் எனும்போது அழுகுரல்களுக்கு கேட்கவா வேண்டும்.அதுவும் என் நாலு அக்காமர்களும் ஆளுக்கு கொஞ்ச நேரம் என்று தம்பியை சண்டை போட்டு வளர்த்தவர்கள். ‘அதில் ஒரு அழுகை இப்படி இருந்தது. ‘’ஐயயோ முத்துராமலிங்கத்தேவர் இறந்த அன்னைக்கி பிறந்தன்னுதானடா ராசா உனக்கு அந்தப்பேரு வச்சோம்.பிறந்த ஒரு வருஷத்துல கொண்டுட்டுபோறதுக்கா அவரு பேர உனக்கு வச்சோம்.’’ கைராசியான டாக்டருன்னு நம்பி வந்தா பிள்ளைய உசுரோட கொண்டுட்டுப்போகச்சொல்றாரே... அய்யோ முத்துராமலிங்கம்.’’ அப்போது ஒரு கான்ஸ்டபிள் முத்துராமலிங்கம் ரூபத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வருகிறார். அவர் கையில் தேவரின் பச்சை குத்தியிருக்கிறது. நான் அன்று சாகப்பிறந்தவனில்லை என்று அந்த சாதாரண கான்ஸ்டபிளுக்கு தெரிந்திருக்கிறது. ‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார். ’கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்கமே தான்’ ‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார் அந்த கான்ஸ்டபிள். உள்ளே போனவர் டாக்டரிடம் ஒரு நீண்ட விவாதம் நடத்தி, ‘எனக்கும் இந்த புள்ள பொழைக்கிறதுக்கு வாய்ப்பில்லங்கிறது தெரியுது. ஆனா இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிரும் ,பத்து நிமிஷத்துல போயிரும்னு வச்சி அடக்கம் பண்றதுக்கு இது வாழ்ந்து முடிச்ச உசுரா?.முடிஞ்ச வரைக்கும் பாருங்க.உயிரோட தூக்கிட்டுப்போக வேண்டாம்’ என்று சொல்ல, கான்ஸ்டபிளை ஒருமாதிரியாகப் பார்த்த லைஸாண்டர், ‘நர்ஸ் யாரையாவது உடனே போய் ஒரு குலை வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லு’ என்று அவசரப்படுத்தியிருக்கிறார். நான் எட்டாம் வகுப்பு படித்த சமயத்தில்,தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தேன்.என் அண்ணன்மார்களின் பலசரக்குக் கடையை, படிப்பு நேரம் போக கவனிக்க வேண்டி, நல்லமநாயக்கன்பட்டியிலிருந்து விருதுநகருக்கு ஷிப்ட் பண்ணப்பட்டிருந்தேன். எல்லோரும், கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்கப்போய்க்கொண்டிருக்க, நான் மட்டும் விருதுநகரிலிருந்து சத்திரரெட்டியபட்டி என்னும் கிராமத்துக்கு படிக்கபோய்க்கொண்டிருந்தேன்.பெரிய பையனான பிறகு வயித்துவலியால் அதிகம் அவதிப்பட்டபோதெல்லாம் லைஸாண்டரை நோக்கி தான் என் சைக்கிள் விரையும். அம்மா சொன்ன கதையின் ஒரு பகுதியை அவரும் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். ,’’ அப்பல்லாம் போலீஸ் யூனிஃபார்முக்கு பயங்கர மரியாதை. போலிஸ்காரர் வந்து சொன்னாரேன்னு சொல்லி, நான் வாழைப்பழ ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சேனே ஒழிய எனக்கு நீ பொழைப்பேன்னு ஒரு துளி நம்பிக்கை கூட கிடையாது. பழம் வாங்கிட்டு வர்றதுக்குள்ளயே உன் கதை முடிஞ்சிரும்னு கூட நினைச்சேன். நடக்கலை. தினமும், முகம் தவிர உன் உடம்பெல்லாம் பழச்சதையை வச்சி மூடிட்டு,சில மணி நேரங்கழிச்சி எடுப்போம். ஒரு மூனு மணி நேரம் நீ தாக்குப்பிடிச்ச உடனே எனக்கு லேசா ஒரு நம்பிக்கை வந்துச்சி.தினமும் ஆஸ்பத்திரியில உன்ன கிராஸ் பண்றப்பல்லாம்,மனசுக்குள்ள ‘நீ செத்துப்பொழைச்சவண்டா’ தான் பாடிட்டுப்போவேன். இப்பப்பாரு வவுத்து வலின்னு வாரத்துக்கு ரெண்டுதடவையாவது என்னை டார்ச்சர் பண்ண வந்துர்ற’’ என்ற டாக்டர் எனக்கு வவுத்து வலி முத்துராமலிங்கம்’ என்று பட்டப்பெயர் வைக்கும் அளவுக்கு அவருக்கு ரெகுலர் ’கஷ்ட’மர் ஆகியிருந்தேன்.போகும்போதெல்லாம் கலர்கலராக மாத்திரைகள் அடுத்த தடவ சரியாகலைன்னா ஆபரேசன் தான் என்று மிரட்டி அனுப்புவார். வாழைப்பழத்தின் தயவில் என் உயிர் நீடிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள்தான்,இனி இவன் பிழைத்துவிடுவான்’ என்ற நம்பிக்கை வந்து, வாடிப்பட்டி, சோழவந்தான், கட்டக்குளம், சுக்கிலநத்தம் போன்ற கிராமங்களிலிருந்து வந்த என் சொந்தங்கள் ஊருக்கே திரும்பியிருக்கிறார்கள். சுமார் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்த என் உடலில் தீக்காயத்துக்கான தழும்பு என்று இருப்பது, இடது கையின் ஒரு பகுதியில் மட்டுமே. அதுவும் தினமும் கவனமாய் வாழைப்பழத்தை நீக்கி, புதிய பழங்களை வைக்கும் வேலையை அம்மா செய்துவர,அது அத்தை கைக்குப்போன ஒரு நாள், அந்தக்கையில் வாழைப்பழத்தை எடுக்கும்போது, எனது சதையும் சேர்ந்துவருவதை அவர் கவனிக்காமல் செய்தததால் நிகழ்ந்தது. இந்தக்கதையை உடைந்த குரலிலேயே பெரும்பாலும் சொல்லும் அம்மா, முத்துராமலிங்கத்தேவர், அந்த கான்ஸ்டபிள், டாக்டர் லைஸாண்டர் ஆகிய மூன்று பேரைப்பற்றிச்சொல்லும்போதெல்லாம் கையெடுத்துக்கும்பிட்டபடியேதான் சொல்லுவார். ’எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே..அத்தனையும் ஒரு தாயாகுமா? அம்மா..அம்மா...அம்மா.. எனக்கது நீயாகுமா? தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை. தாயின் வடிவில் தெயவத்தைக்கண்டால் வேறொரு தெய்வமில்லை’ - இது அடிக்கடி நான் கேட்கும் பாடல் எனும்போது என்னை வாழவைத்த ‘முத்துராமலிங்கம்’ எனும் இந்தப் பெயரை நான் கல்லறைக்குப்போகும் வரை மாற்ற முடியுமா? அப்புறம் எனக்கு விபரம் தெரிந்தபிறகு ‘தேவர்’ பச்சை குத்தியிருந்த அந்த கான்ஸ்டபிளை நான் பார்த்ததில்லை. ஆனால் டாக்டர் லைஸாண்டரோ வாழ்நாள் முழுக்க பல சமயங்களில் என் கனவுகளில் வந்து நலம் விசாரித்துவிட்டுபோயிருக்கிறார்.clip_image002 90ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள், நான் என் சொந்த வேலை காரணமாக ரயிலில் மும்பை பயணித்துக்கொண்டிருக்கிறேன். வழக்கத்தை விட ஒரு நீண்ட கனவு, ‘என்னய்யா ராசா இப்பல்லாம் என்னப்பாக்க வர்றதேயில்லை. ஊரை விட்டுக் கிளம்பின உடனே வவுத்து வலியெல்லாம் சரியாப்போச்சா?’’ என்றெல்லாம் பேசுகிறார் டாக்டர். இறங்கின உடனே முதல் வேலையாக என் விருதுநகர் நண்பனுக்கு போன் அடித்து விஷயத்தைச்சொல்கிறேன். ”டேய் இன்னைக்கி காலைல தான் நான்குநேரி பக்கத்துல ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல லைஸாண்டர் டாக்டர் இறந்துட்டார்டா’’. அதன்பிறகு ஒருமுறை கூட டாக்டர் என் கனவில் வரவேயில்லை… நன்றி: திரு.முத்துராமலிங்கம் ஆதாரம்: http://ohoproduction.blogspot.com/2012/03/blog-post_1706.html http://ohoproduction.blogspot.com/2012/03/blog-post_22.html

No comments: