Saturday, October 26, 2013

காளையார்கோவிலில் நாளை மருதுபாண்டியர் நினைவு தினம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) தேதி நடைபெற உள்ள மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி 3 எஸ்.பிக்கள் தலைமையில் 2,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதிலும் 15 இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச் சாவடிகளில் விடியோ கேமராக்கள், ஆன்லைன் முறையில் வாகனங்களின் பதிவுகளை சரிபார்த்தல், விடியோ கிராபர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணிக்காக 2,600 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதைத் தவிர பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்தினை கண்காணிப்பதற்காக 3 எஸ்.பி.க்கள், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 17 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 57 காவல் ஆய்வாளர்கள், 260 சார்பு ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு காவல் ரோந்து வாகனம் என்ற வகையில் மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்: ராமநாதபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருவாடானை, சருகனி வழியாகவும், பார்த்திபனூர்,மானாமதுரை, சிவகங்கை வழியாகவும் காளையார்கோவிலுக்குள் வரவேண்டும். புதுக்கோட்டையிலிருந்து வரும் வாகனங்கள் திருமயம், கீழச்செவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாகவும், அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாகவும் காளையார்கோவிலுக்கு வரவேண்டும். மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் மேலூர், மலம்பட்டி, சிவகங்கை வழியாகவும், வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை வழியாகவும் காளையார்கோவிலுக்கு வரவேண்டும். தடைசெய்யப்பட்ட வழித்தடம் : ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி, காந்திநகர், குமரக்குறிச்சி, இந்திரா நகர், இளையான்குடி வழியாக காளையார்கோவிலுக்கு வரும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. பொட்டப்பாளையத்திலிருந்து திருப்புவனம் வழியாக வரும் வாகனங்கள் கொந்தகை, பசியாபுரம், சிலைமான் வழியாக வர அனுமதி இல்லை. குமரக்குறிச்சியிலிருந்து வரும் வாகனங்கள் காந்திநகர், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக வருவதற்கு அனுமதி உண்டு. எனவே இவ்வழியில் வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். .

No comments: