Friday, October 11, 2013

தேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரத் தடை: ஆட்சியர்

தேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வர அனுமதி கிடையாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேவர் குருபூஜை விழா தொடர்பாக ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.விஸ்வநாதன், காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் க.நந்தகுமார் பேசியதாவது: பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவின் அடிப்படையில் இம்மாதம் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வாடகை வாகனங்கள், டிராக்டர், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை வர அனுமதி கிடையாது. 30 ஆம் தேதி அன்று பசும்பொன்னில் நடைபெறும் விழாவுக்கு ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். வாகனப் பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோரின் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இம்மாதம் 22 ஆம் தேதிக்குள் தெரிவித்து அதற்கான அனுமதி சான்றினைப் பெற்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும். இதனை சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப்பணியில் உள்ள காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவர். சரக்கு வாகனங்களில் வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கு வருவோர் வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்து வருவதோ, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தி வருவதோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வருவதற்கோ, கோஷங்களை எழுப்புவதற்கோ அனுமதி கிடையாது. காவல்துறையின் அனுமதி பெற்று விழாவுக்கு வரும் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விழாவுக்கு நடைபயணமாக வருவதற்கும் அனுமதி கிடையாது. பசும்பொன் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். ஜோதி ஓட்டம் மேற்கொள்வதற்கு நினைவிடத்திலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளில் ஜோதி எடுப்பது தொடர்பான பொருட்கள், ஆயுதங்கள், பேனர்கள், கொடி மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட எதையும் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. பசும்பொன்னில் மட்டும் காவல்துறையின் அனுமதி பெற்று பிளக்ஸ் போர்டு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். அதில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து கமுதி காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் எழுத்துப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாதம் 22 ஆம் தேதிக்கு முன்பாக அளிக்க வேண்டும். அவ்வாறு வரும் அரசியல் கட்சித் தலைவர்களும் சொந்த வாகனங்களில் மட்டுமே (அதிகபட்சமாக 3 வாகனங்கள் மட்டும்) வர அனுமதிக்கப்படுவர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பசும்பொன் கிராமத்துக்கு வரும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும் வழித்தட விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் ஆட்சியர் க.நந்தகுமார் கூறினார். .

No comments: