Wednesday, October 2, 2013

சிவாஜியின் பிறந்த தினத்தை புறக்கணித்த நடிகர் சங்கம், காங்., நிர்வாகிகள்


மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், 86வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வரவில்லை. அதேபோல், தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் அவரது உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செய்யாமல் புறக்கணித்தது, சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. நடிகர் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த, 'தெய்வமகன்' திரைப்படம் முதன் முதலாக, ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, அவரை கவுரவப்படுத்தும் வகையில், அமெரிக்காவில், நயாகரா பகுதிக்கு ஒரு நாள் மேயராக நியமித்து கவுரவிக்கப்பட்டார். இந்த வாய்ப்பு இந்தியாவில் சிவாஜிக்கும், மறைந்த பிரதமர் நேருவுக்கு மட்டும் தான் கிடைத்தது. இத்தகைய பெருமை வாய்ந்த சிவாஜியை, தமிழ் திரையுல கலைஞர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மறந்து விட்டனர் என்பது தான், அவரது ரசிகர்களுக்கு வேதனையை அளிக்கிறது. சுதந்திர போராட்டத்திற்காக, பாடுப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் பிள்ளை, பாரதியார் வேடத்தில் நடித்து, அவர்களின் தியாகத்தை திரைப்படம் மூலம், தமிழக ரசிகர்களின் மனதில் முத்திரையாக பதித்தவர் சிவாஜி. இந்த ஆண்டின் முதியோர் தினத்தில், சிவாஜியின் பிறந்த தினம் வந்ததால், அவரது ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவரை திரையுலகினரும், காங்கிரசாரும் மறந்த கதையும் உள்ளது. நடிகர் சங்கத்தின் சார்பில், மணி மண்டபம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதற்காக, அரசு சார்பில், சென்னை அடையாறில் நிலம் ஒதுக்கப்பட்டும் பணிகள் துவக்கப்படவில்லை. சிவாஜியின் பிறந்த தினம், நடிகர் தினமாக, நடிகர் சங்கத்தின் தலைவராக ராதாரவி பணியாற்றிய போது கொண்டாடப்பட்டது. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் நேற்று எந்த விழாவும் நடத்தவில்லை. மேலும், சென்னை மெரினா கடற்கரை உள்ள சிவாஜி சிலைக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவிக்க வரவில்லை என, அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்.பி., யாக பணியாற்றி, கட்சி வளர்ச்சிக்காக பாடுப்பட்ட சிவாஜியை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் மறந்து விட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர், தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய போது, சிவாஜி பிறந்த தினவிழா சத்தியமூர்த்திபவனில் கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மூப்பனாரின் சிஷ்யன். மூப்பனாரை எதிர்த்து சிவாஜி அரசியல் செய்ததால், சிவாஜியை ஞானதேசிகன் கண்டுக்கொள்ளவில்லை என, கூறப்படுகிறது. சிவாஜி சிலைக்கு, நேற்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் கஜநாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ், உள்ளிட்ட சிலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது, ஆறுதல் விஷயமாக இருந்தது. சிவாஜி சிலைக்கு, ஆந்திராவில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

No comments: