திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் சின்னையா மன்றாடியார்-ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 1928 அக்., 1ல் பிறந்தார் சிவாஜி. கணேசமூர்த்தி என பெற்றோர் பெயர் வைத்தனர். அவர் பிறந்த போது, தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சங்கிலியாண்டவர்புரத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம் பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக்கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் சிவாஜியை கவர்ந்தன. அருகில் வசித்த காக்கா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து திருச்சி
தேவர்ஹால் நாடகக்குழுவில் சேர்ந்தார். பின் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக்குழுவில் காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜியை சேர்த்து விட்டார்.சில நாடகங்களில் நடித்த சிவாஜிக்கு திருப்பமாக அமைந்தது அண்ணாத்துரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகம். சென்னையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் கணேசனாக இருந்தவர், சிவாஜியாக நடித்தார். அண்ணாத்துரை காகப்பட்டராக நடித்தார். நாடகத்திற்கு தலைமை வகித்து ரசித்த பெரியார், கணேசனை பாராட்டி, சிவாஜிகணேசன் என பெயரிட்டார்.
முத்தாய்ப்பாய் முதல் படம்துவக்கத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்த சிவாஜி, பராசக்தி நாடகத்தில் நடித்தார். அதன் பெருமை அறிந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள்
முதலியார், ஏ.வி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து படமாக எடுக்கவும், அதில் சிவாஜியை நடிக்க வைக்கவும் முடிவு செய்தார். ஏதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் ஏ.வி.மெய்யப்பசெட்டியாருக்கு புதிய நடிகரான சிவாஜியை வைத்து சினிமா எடுத்தால் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அன்றைய சூழலில் பிரபலமாக இருந்த கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறினார்.
அதை ஏற்க மறுத்த பெருமாள்முதலியார், சிவாஜியே நடிக்கட்டும் என்ற உறுதியுடன் 1951ல் அப்படம் எடுக்கப்பட்டது. முதல் வசனமாக சக்ஸஸ் என சிவாஜி பேசிய இடம் இன்றும் ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நினைவு சின்னமாக திகழ்கிறது.காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்காலத்தால் அழியாத பராசக்தி படம், அன்றைய அரசின் அவலங்களை
கூறியதால் படத்தை தடை செய்ய பல முயற்சிகள் நடந்தன. அதைமீறி வெற்றிகரமாக ஓடியதால் சிவாஜிக்கு சினிமா வாய்ப்புகள் பெருகின. உத்தமபுரத்திரன், மனோகரா, மகாகவி காளிதாஸ், காத்தவராயன், புதையல், சித்தூர் ராணி பத்மினி, தூக்கு தூக்கி, குறவஞ்சி போன்ற புராணப் படங்கள் சிவாஜிக்கு புகழை தந்தன. கதாபாத்திரமாகவே ஒன்றி நடித்தததால், அவை இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது.
சிவாஜிக்கு பாஎம்.ஜி.ஆருக்கு தாய்க்கு பின் தாரம், தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே என தா என்ற எழுத்தில் துவங்கும் படங்கள் வெற்றியாக அமைந்தது போல, சிவாஜிக்கு பா வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியை தந்தன. அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் பாசமலர், மகளுக்கும் தந்தைக்கும் உள்ள பாசத்தை விளக்கும் பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும், நிச்சய தாம்பூலம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.
மறக்க முடியாத படங்கள்வீரபாண்டிய கட்டபொம்மனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாட்டுக்கொரு புலவன் பாரதியாக, கர்ணனாக சிவாஜி நடித்தது வரலாற்றின் பதிவு. கட்டபொம்மன் இப்படி இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே தெரிந்து கொண்டோம். திருமால் பெருமை, திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் அவர் நடிப்பின் பெருமை கூறுபவை. திரிசூலம், வசந்த மாளிகை, டாக்டர் சிவா, புதிய பறவை, சிவந்த மண் போன்றவை அவரின் நடிப்பு பரிணாமத்தை காட்டின. சிவாஜி நடித்த தெய்வமகன் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம்.
தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வாழ்நாளின் இறுதிவரை தொழில் பக்தி, நேரம் தவறாமை போன்ற குணங்களால் போற்றப்பட்டார்.தனி கட்சி துவக்கம்துவக்கத்தில் திராவிடக்கழகத்தில் இருந்தாலும், பின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை துவக்கினார். பிறகு 1989ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து, கட்சியை இணைத்து கொண்டார். தமிழக ஜனதா தள தலைவராகவும் திகழ்ந்தார்.
திரையுலகில் நடிக்க தெரிந்த சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை.சக நடிகர் மீதும் மதிப்புசிவாஜி ரசிகர் என்ற அடிப்படையிலும், சிவாஜி குடும்பத்தில் உதவியாளராக என் சகோதரர் திருப்பதி ஆறுமுகம் பணிபுரிந்ததன் அடிப்படையிலும் அவருடன் பழகும் வாய்ப்பை பெற்றேன். 1972ல் மதுரை முள்ளிபள்ளம் பகுதியில் பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு நடந்தது. பள்ளியில் படித்த நான், சிவாஜி மன்றத்தினருடன் சேர்ந்து அவரை பார்க்க சென்றேன். வைகையாற்றில் இரு கதாநாயகிகளுடன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி கிராம ஜமீன்தார் வேடத்தில் இருந்தார். பச்சைக்கலர் பெல்ட் அணிந்து, கொண்டை வைத்த தலைமுடியுடன் காட்சியளித்தார். அவரை பார்த்தபோது, டே பசங்களா அங்கே ஒரு அம்மா உட்கார்ந்திருக்கு. அங்கேயும் சென்று பார்த்து சொல்லுங்கள், என்றார்.
அங்கு அமர்ந்திருந்தவர் ஜெயலலிதா. தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களையும் மதிக்கத் தெரிந்தவர் சிவாஜி என இது காட்டியது. தேடி வந்த விருதுகள் கருணாநிதியின் வசனம், கண்ணதாசனின் எழுத்து, டி.எம்.சவுந்திரராஜனின் குரல், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆகியவற்றால் சிவாஜியின் படப்பாடல்கள் இன்றும் பட்டிதொட்டிகளில் அன்றாடம் ஒலிக்கின்றன. கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதாசாகிப் பால்கே விருதுகள் அவருக்கு பெருமை சேர்த்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் படம், ஆப்ரிக்கா உலக திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டது. 1962 ல் அமெரிக்கா நியூயார்க் மாகாண நயகரா நகரின் ஒரு நாள் மேயர் சிறப்பு அந்தஸ்தை பெற்றார். 2001ல் அவர் மறைந்த போது, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சிவாஜி என்ற மிகப்பெரும் நடிகரின் சுவடுகள் தமிழ் மண்ணிலும், தமிழர் மனதிலும் என்றும் பதிந்துருக்கும்.
ஏ.எஸ்.பி.சிவசுந்தரம்,சமூக ஆர்வலர், மதுரை. 94433 48284. -
No comments:
Post a Comment